சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம் ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும் தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே
சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம் வாயாட்டம் தீர்ந்தனவே மற்று