சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும் பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் பத்தியும் எனக்கருள் பரிந்தே வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் மணிவளர் அணிமலர் முகத்தாய் ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே
சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ் செல்வமே என்பெருஞ் சிறப்பே நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத் திருந்தர சளிக்கின்ற பதியே பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே