ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும் நாயினும் கடையஇந் நாய்க்குன் சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத் தேன்தரு நாளும்ஒன் றுண்டோ ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில் அருள்பழுத் தளிந்தசெங் கனியே கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக் குன்றமர்ந் திடுகுணக் குன்றே
ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே நன்கறிந் துன்திரு அருளாம் சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவ தேயோ நீலமா மிடற்றுப் பவளமா மலையே நின்மல ஆனந்த நிலையே காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே