தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என் உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே வானே மதிக்கச் சாகாத வரனாய்() எல்லாம் வல்லசித்தே வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும் நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன் நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே () வானாய் - முதற்பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க
தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான் தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான் நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான வான்ஆனான் அம்பலத்தெம் மான்