துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான் சோர்ந்தொரு புறம்படுத்துத் தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால் தூயதிரு வாய்மலர்ந்தே இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இருகைமலர் கொண்டுதூக்கி என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத் தியலுற இருத்திமகிழ்வாய் வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி வைத்தநின் தயவைஅந்தோ வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப வாரிஅமு தூறிஊறித் துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச் சுகவண்ணம் என்புகலுவேன் துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே