நன்று செய்வதற் குடன்படு வாயேல் நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம் இன்று செய்திநீ நாளைஎன் பாயேல் இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார் அன்று முன்னரே கடந்தனர் அன்றி அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே
நன்று புரிவார் திருவொற்றி நாதர் எனது நாயகனார் மன்றுள் அமர்வார் மால்விடைமேல் வருவார் அவரை மாலையிட்ட அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்தறியேன் குன்று நிகர்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே