புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன் நிலைய மாம்திருத் தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்றருள் நின்மலக் கொழுந்தே விலையி லாதநின் திருவருள் விழையேன் வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன் இலைஎ னாதணு வளவும் ஒன்றீயேன் என்செய் வான்பிறந் தேன்எளி யேனே
புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில் போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக் கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான் கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் விலையி லாஉயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கொளி விளக்கே சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே செல்வ மேபர சிவபரம் பொருளே