புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட பொற்சபை அப்பனை வேதம் சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட ஸோதியைச் சோதியா தென்னை மல்லிகை மாலை அணிந்துளே கலந்து மன்னிய பதியைஎன் வாழ்வை எல்லியும் இரவும் என்னைவிட் டகலா இறைவனைக் கண்டுகொண் டேனே
புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த பொய்ம்மன மாயையைக் கணத்தே மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட மெய்யநின் கருணைஎன் புகல்வேன் வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும் வள்ளலே மறைகள்ஆ கமங்கள் சொல்லிய பதியே மிகுதயா நிதியே தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே