பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப் புகலுமூ வுலகுநீத்துப் புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல் போய்அருள்ஒ ளித்துணையினால் வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர வெளிகண்டு கொண்டுகண்ட விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய் விளங்குநாள் என்றருளுவாய் வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை மதிநெறிஉ லாவும்மதியே மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு மருந்தேபெ ருந்தெய்வமே காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு கடிமதிற் றில்லைநகர்வாழ் கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே