பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி வாதை உற்றிட வைத்தனை ஐயோ மதியில் காமமாம் வஞ்சக முறியா ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால் எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில் ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே
பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம் பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம் தாதை நீஅவை எண்ணலை எளியேன் தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய் கோதை நீக்கிய முனிவர்கள் காணக் கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே