பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம் போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான் பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன் பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன் ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே
பொன்னுடையார் இடம்புகவோ அவர்கட் கேற்கப் பொய்ம்மொழிகள் புகன்றிடவோ பொதிபோல் இந்தக் கொன்னுடையா உடல்பருக்கப் பசிக்குச் சோறு கொடுக்கவோ குளிர்க்காடை கொளவோ வஞ்ச மின்னிடையார் முடைச்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்திளைத்து விழிக்க வோதான் என்னுடையாய் என்னுடையாய் என்னை இங்கே எடுத்துவளர்த் தனைஅறியேன் என்சொல் வேனே