போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே போற்றிநின் பூம்பதம் போற்றி ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி அமலநின் அடிமலர் போற்றி ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி இறைவநின் இருங்கழல் போற்றி சாற்றுமா றரிய பெருமையே போற்றி தலைவநின் தாட்டுணை போற்றி
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்துதம் தந்தையர் தமையே வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா மெல்லிய சரிகைவத் திரந்தா ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே இரங்குவார் இவைகுறித் தடியேன் தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ திருவுளம் அறியநான் அறியேன்