மன்றாடும் மாமணியே நின்பொற் பாத மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான் ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன் இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன் இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன் என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும் எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே
மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன் மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும் நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம் என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ