மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே யாவு மாகிநின் றிலங்கிய பொருளே நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே சேறு பூத்தசெந் தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே
மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல் கூறு கின்றதென் என்றயர் கின்றேன் குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம் இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே தேறு கின்றனன் என்செய்கேன் நினது சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே