முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே