வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர் தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ
வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மாமணியே உனைநினையேன் வாளா நாளைக் கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால் எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்