வன்மை செய்திடும் வறுமைவந் தாலும் மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும் புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும் பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும் தன்மை இல்லவர் சார்பிருந் தாலும் சான்ற மேலவர் தமைஅடைந் தாலும் நன்மை என்பன யாவையும் அளிக்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே
வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய் வழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ இன்மை யாளர்போல் வலியவந் திடினும் ஏழை யாம்இவன் என்றொழித் திட்டால் தன்மை அன்றது தருமமும் அன்றால் தமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே பொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ