3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை,
முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச்
சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம்
எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக்
கொதிக்க வைக்கலாம்.
அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க
வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை
கலந்து சாப்பிட வேண்டும்.
4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை
அணியவேண்டும்.
5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான
உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று
நேரம் கடவுளை வணங்க வேண்டும்.
6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும்
(சோம்பேறித்தனத்துடன்) உண்ணக்கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த
வேண்டும்.
7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக்கிழங்கை
உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை
அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச்
சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய்
உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.
8. கத்தரிக்காய்,
வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய்,
கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன்
வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த
வேண்டும்.
9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற
சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.
10.
புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
11. பருப்பு வகைகளில் துவரம்பருப்பை
அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக்
கொள்ளலாம்.
12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க
வேண்டும்.
13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.
14. மாலை வெயில் உடலில்
படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும்
வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.
15. இரவின்
தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
பின் தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப்
படிக்கலாம். வீட்டு விவகாரங்களைப் பற்றிப் பேசலாம்.
16. பிறகு இரவு உணவு.
பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.
17. இரவில் கீரை,
தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக்கூடாது. இரவில்
சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.
18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு
மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
19.
பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து
உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு
வைத்துக் கொள்ளக்கூடாது | ஒரே இரவில்.
20. உடலுறவு முடிந்தபின் உடலைத்
தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு
நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை
என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.
21.
படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி
நேரத்துக்குமேல் உறங்கக்கூடாது.
22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை,
கடுஞ்சொல் போன்றவை கூடாது.
23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி
நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.
24. பதற்றம்
மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.
25.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில்
குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத்
தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.
26. புகை, கஞ்சா, கள், சாராயம்
போன்றவை கூடாது.
27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு
ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.
வள்ளலார் வழங்கியுள்ள
பிரார்த்தனை
ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக
மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல்
வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம்
அடங்கிவிடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:
"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
ஜோதி அளித்தென்
உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்.
நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான்
பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."
பொன்னான
மண்!
பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்,
சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு.
அம்முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையும் இழந்தார்.
ஒரு நாள் அவருடைய
வீட்டைக் கடந்து ராமலிங்க அடிகளார். சென்றார். அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச்
சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையையெல்லாம் சொல்லிச் சொல்லி
அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறு கெஞ்சிக்
கேட்டுக்கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறைய தண்ணீர் கொண்டுவருமாறு
கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை
எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்தது. தம்ளரின் அடியில்
சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட
மாஜி செல்வந்தர், அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.
வள்ளலார் சொன்னார்: இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான். ஆனால் ஒன்றே
ஒன்று, பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே இந்த வித்தை பலிக்கும்!
ஆக்கம்:கவியோகி வேதம்
நன்றி: விகடன்.
* நீங்கள் இதுவரையில் சாப்பிடாத ஒரு உணவு பதார்த்தம் உங்கள்
முன் இருக்கிறது. அதன் ருசியை அனுபவிக்க வேண்டும், எப்படியாவது அதை சாப்பிட்டுவிட
வேண்டும் என்ற ஆசை உங்கள் உள்மனதிற்குள் எழும்புகிறது. இது இயல்பு. அந்த
பதார்த்தத்தை நீங்கள் வாயில் போட்டு உண்ணும் வரையில் அதன் ருசி உங்களுக்குத்
தெரியாது. அதுவரையில் அதன் மீதிருக்கும் ஆசை கூடிக்கொண்டு போகுமே தவிர சற்றும்
குறையாது. அதேபோல் இறைவனும் நமக்கு பிடித்தமானவராகவே இருக்கிறார். அவரை வெறுமனே
பார்த்துக் கொண்டிருப்பதால் மட்டும் நாம் அவரை அடைந்துவிட முடியாது. அவரை நாம்
மனதிற்குள் வைத்து, அனுபவித்து மகிழ்ந்தால்தான் இது சாத்தியமாகும். எனவே, இறைவனை
அடையவேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் செயல்படுங்கள். அவர் மீது வைத்திருக்கும்
ஆசையை மட்டும் விட்டுவிடாதீர்கள்.
* இறைவன் உருவமாக இல்லாமல், ஒளி
வடிவில்தான் அருள் செய்கிறான். மேல் உலகம், கீழ் உலகம், அளவிடமுடியாத அண்டம் என
மூன்று உலகத்திலும் நிறைந்திருக்கும் அவன் அசைந்தாடுகின்ற
ஒளியாகிய ஜோதியில்
ஐக்கியமாகி இருக்கிறான். இந்த உண்மையை தெரிந்துகொண்டு அந்த ஜோதியையே பரம பிதாவாக
எண்ணி வழிபடுங்கள். தன்னை ஜோதி வடிவினனாக வழிபடுவதைத்தான் இறைவனும்
விரும்புகிறான்.
— வள்ளலார்
தைப்பூசம்வள்ளலார்
சித்தியடைந்த நாள்கடலூர் அருகிலுள்ள திருமருதூர்
கிராமத்தில் வசித்த ராமையா பிள்ளையின் ஆறாவது மனைவி சின்னம்மை. தனது முந்தைய ஐந்து
மனைவிகளும் தொடர்ந்து இறந்ததால் ஆறாவதாக சின்னம்மையை மணம் முடித்திருந்தார்.
இவர்களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமலை என்ற நான்கு பிள்ளைகள்
பிறந்தனர்.
ராமையா பிள்ளையும், சின்னம்மையும் சிறந்த சிவபக்தர்கள். தினமும்
வீட்டிற்கு ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அவருக்கு அன்னதானம் செய்வதை வழக்கமாக
கொண்டிருந்தனர். ஒருநாள் மதியவேளையில் சிவனடியார் ஒருவர் புலித்தோல் உடுத்தி ராமையா
பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராமையாபிள்ளை வெளியில் சென்றிருந்தார்.
சின்னம்மையார், அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து, விருந்து படைத்தார். வயிறும்,
மனமும் நிரம்பப் பெற்ற சிவனடியார் சின்னம்மையிடம், ""உனக்கு ஒரு புதல்வன்
பிறப்பான். தெய்வ மகனான அவன் இறைவனுக்கு நிகரானவனாக இருப்பான்'' என்று
வாழ்த்திவிட்டு விபூதியும் தந்து சென்றுவிட்டார்.
விபூதியை நெற்றியில்
வைத்து, சிறிதுவாயிலும் போட்ட சின்னம்மை, சற்றுநேரத்தில் மயக்கமடைந்தார். வெளியில்
சென்றுவிட்டு வீடு திரும்பிய ராமையாபிள்ளை, மனைவி மயக்கமடைந்திருந்ததை கண்டு
அதிர்ந்தார். அவரை எழுப்பி, "என்ன நடந்தது?' என்று விசாரித்தார். சிவனடியார் வந்த
விஷயத்தையும், அவர் தனக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னதையும் மிரட்சியுடனும்,
சந்தோஷத்துடனும் சொன்னார். ராமையா பிள்ளையும் மகிழ்ந்தார்.
சிலநாட்கள்
கழித்து சின்னம்மையின் வயிற்றில் இறைவன் ஜோதி வடிவமாக புகுந்தார். பத்து மாதங்கள்
கருவை சுமந்த சின்னம்மை, 1823, புரட்டாசி 21 (அக்டோபர் 5) ஞாயிற்றுக்கிழமையன்று,
சித்திரை நட்சத்திரத்தில் ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்தார்.
அக்குழந்தை
பிறந்ததால் திருமருதூர் கிராமமே அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது.
ராமையாபிள்ளையும், அவர் மனைவி சின்னம்மையும் மகிழ்ச்சிக் கடலின் எல்லைக்கே
சென்றனர். குழந்தை பிறந்த நேரத்தில் பசுமையுடன் இருந்த அவ்வூர், மேலும்
செழிப்பானது. அக்குழந்தைக்கு "ராமலிங்கம்' என்று பெயர் வைத்தனர். ராமலிங்கத்திற்கு
ஐந்து வயதானபோது, அவரது பெற்றோர் அவரைக் கூட்டிக்கொண்டு சிதம்பரம் தில்லையம்பலம்
கோயிலுக்கு சென்றனர். கோயிலில் நடராஜருக்கு பூஜைகள் நடந்துகொண்டிருந்தது. மக்கள்
நடராஜரின் அழகில் லயித்து அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். கோயில் முழுதும் நிசப்தமாக
இருக்க, அரங்கமே அதிரும் வகையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. அனைவரும் சிரிப்பு சத்தம்
கேட்ட திசையைப் பார்க்க அங்கு சிறுவனாக இருந்த ராமலிங்கம், நடராஜரைப் பார்த்து
பலமாக சிரித்துக் கொண்டிருந்தார். நடராஜரைக் கண்டு சிரிக்கும் இக்குழந்தை
"ஞானக்குழந்தை' என அங்கிருந்த பக்தர்களில் சிலர் கூறினர். சிலர் அவரைத் தொட்டு
வணங்கிவிட்டுச் சென்றனர்.
சிதம்பரம் கோயிலுக்கு சென்று வந்த சிலநாட்களிலேயே
ராமையா பிள்ளை இறந்து போனார். ராமலிங்கத்தின் குடும்பம் வறுமையில் வாடியது.
குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட சின்னம்மை, அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை
சென்றார். அங்கு வித்வான் சபாபதி முதலியாரிடம், தனது மூத்த மகன் சபாபதிக்கு கல்வி
கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டாள். சபாபதி சிறந்த தமிழாசிரியர். அவரிடம் பயின்ற
சபாபதி, குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். குடும்பம்
வறுமையில் இருந்து சற்று மீண்டது.
சபாபதி, தன் தம்பி ராமலிங்கத்தை பெரிய
அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் விரும்பினார். ஆனால்,
ராமலிங்கத்திற்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார்.
அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான வித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி
பயில அனுப்பி வைத்தார் சபாபதி.
ராமலிங்கம் அங்கும் சரியாக படிக்கவில்லை.
வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள்
ராமலிங்கத்தைக் கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் சபாபதி
முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த ராமலிங்கம், ""ஒருமையுடன் நினது
திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்,'' என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும்
பொருளுடனான அப்பாடலை ராமலிங்கம் பாடுவதைக் கண்ட சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று
கண்ணீரே வடித்துவிட்டார்.
ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதியிடம், ""உனது தம்பி
ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும்
அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது,'' என்று சொல்லிவிட்டார்.
தன் தம்பி
மேல் கோபம் கொண்ட சபாபதி, வீட்டில் அவருக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று
சொல்லிவிட்டார். ஆனால், அவர் மீது அளவிலாத அன்பு கொண்டிருந்த சபாபதியின் மனைவி
மறைமுகமாக அவருக்கு உணவு கொடுப்பார். இதையறிந்த சபாபதி, ராமலிங்கத்தை வீட்டைவிட்டு
அனுப்பி விட்டார். அவர் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு சென்று அங்கேயே
தங்கியிருந்து முருகனின் புகழ் பாடி அவரை வழிபட்டு வந்தார். இதனிடையே தன் மனைவி
வற்புறுத்தியதால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார் சபாபதி.
அண்ணனிடம் தான்
ஒழுங்காக படிப்பதாக வாக்குறுதியளித்தார் ராமலிங்கம். அவருக்கென தனியே வீட்டில் ஒரு
அறையை ஒதுக்கித் தந்தார் சபாபதி. அந்த அறையில் ராமலிங்கம் ஒரு கண்ணாடியை
வைத்துக்கொண்டு, அதற்கு மாலை சூடி, வணங்கியபடி இருந்தார்.இதைக் கவனித்த சபாபதி தன்
தம்பியின் இறைபக்தியையும், ஆன்மிக நாட்டத்தையும் அறிந்து அதன் பின்பு ராமலிங்கத்தை
கண்டிக்கவில்லை. இப்படியே காலம் சென்றது. ஒருமுறை சபாபதி விழா ஒன்றில் பெரியபுராண
சொற்பொழிவு நிகழ்த்த ஒப்புக்கொண்டிருந்தார். விழா நடந்த தினத்தன்று அவருக்கு
உடல்நிலை சரியில்லாததால், சொற் பொழிவிற்கு செல்ல முடியவில்லை. தனக்குப் பதிலாக
தம்பியை அனுப்பினார் சபாபதி. மகிழ்ச்சியுடன் சென்ற ராமலிங்கம், அதுவரையில் இல்லாத
வகையில் அருமையாக சொற்பொழிவாற்றினார். அவரது பேச்சாற்றல் பற்றி கேள்விப்பட்டு,
சபாபதி வியந்துபோனார். அவருக்கு மணம் முடிக்க விரும்பினார்.
ராமலிங்கமோ,
தான் இறைப்பணி செய்வதிலேயே விருப்பம் கொண்டிருப்பதாகவும், திருமணம் வேண்டாம் எனவும்
மறுத்தார். ஆனாலும் சபாபதியும், குடும்பத்தினரும் அவரை விடவில்லை. ராமலிங்கத்தின்
சகோதரி உண்ணாமலை, தன் மகள் தனக்கோட்டியை ராமலிங்கத்திற்கு மணம் முடித்துக்
கொடுத்தார். அவரும் இறைபக்தி மிக்கவராக இருந்தார். கணவன், மனைவி இருவரும் குடும்ப
வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல், இறைசிந்தனையிலேயே இருந்தனர். இருவரும்
தனித்திருக்கும் வேளையில் திருவாசகம், பெரியபுராணம் என சிவனைப் பற்றி பேசிக்
கொண்டிருப்பர்.
இப்படியே ராமலிங்கத்தின் வாழ்க்கை கடந்தது. ஒருமுறை வயலில்
விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை
தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, "வள்ளலார்' என்ற அடைமொழி தந்தனர். அவர்
மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார். அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு
அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல்
பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த
ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை
பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை
வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு "ஜீவகாருண்ய' உண்மைகளை உணர்த்தி பேசினார்
வள்ளலார். இப்படி கருணையின் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார், வடலூரில் 1872ம்
ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்.
1874ல் தை மாதம் 19ம் தேதி
வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக
மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்குச் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்.
Vallalar History in Tamil