Vallalar.Net

ஜீவகாருண்ய ஒழுக்கம் - மூன்றாவது பிரிவு

ஜீவகாருண்யத்தின் சொரூபம் முதலியன
திருச்சிற்றம்பலம்

சீவகாருணியமாகிய ஆன்ம உருக்கம் உண்டாவதற்கு உரிமை எது என்றறியவேண்டில்:- சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய கடவுளியற்கை உண்மை ஏகதேசங்களாகிக் கடவுளருட்சத்தியால் பூதகாரிய தேகங்களில் வருவிக்கப்பட்டபடியால் இச்சீவர்களெல்லாம் ஓருரிமை இனத்தவர்களே யாகும். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுவதைக் கண்டபோதும் கேட்டபோதும் அறிந்தபோதும் - அவர் தேகம் தமது சகோதர தேகமென்று தெரிந்துகொண்ட - மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது தேக உரிமையால் என்று அறிவதுபோல், ஒரு சீவன் ஒரு ஆபத்தால் துக்கப்படுவதைக் கண்ட போதும் கேட்டபோதும் அறிந்தபோதும் அந்த சீவனைத் தமது ஆன்ம இனம் என்று தெரிந்து கொண்ட மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது ஆன்மஉரிமை என்றறியவேண்டும்.

சீவர்கள் துக்கப்படுவதைக் கண்டபோதும் சிலர் சீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாக இருக்கின்றார்களே, இவர்களுக்கு ஆன்ம உரிமை இல்லாமற்போவது என்னென் றறியவேண்டில்:- துக்கப்படுகின்ற சீவரைத் தமது ஆன்ம இனமென்றும் துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கின்ற கண்ணானது அஞ்ஞான காசத்தால் மிகவும் ஒளிமழுங்கின படியாலும் அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனமுதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாசப் பிரதிபலித மில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று. அதனால் ஆன்மஉரிமை இருந்தும் சீவகாருணியமில்லாமல் இருந்ததென் றறியவேண்டும்.

ஆனால் இந்த ஆன்மஉருக்கம் என்கின்ற சீவகாருணியத்திற்கு ஆற்றல் எவ்விடத்து உண்டாகுமென்று அறியவேண்டில்:- பசி கொலை பிணி முதலிய தடைகளில் எந்தத் தடைபற்றி சீவகாருணியந் தோன்றியதோ அந்தத் தடையை நிவர்த்தி செய்கின்ற விடத்துத்தான் சீவகாருணியத்திற்கு ஆற்ற லிருந்ததென்று அறியவேண்டும்.

இதனால், 'சீவர்களுக்குப் பசி கொலை பிணி முதலியவற்றால் வருந் துன்பங்களெல்லாம் மனம் கண் முதலிய கரணேந்திரிய அனுபவங்களேயல்லது ஆன்ம அனுபவங்களல்ல; ஆகலில் சீவகாருணியத்தால் விசேஷ பிரயோசனமில்லையே' என்பார்க்கு உத்தரம் யாதென்றறிய வேண்டில்:- இந்தத் தேகத்தில் ஆன்மாவும் அறிவுக்கறிவா யிருக்கிற கடவுள்விளக்கமுந் தவிர, கரணம் இந்திரியம் முதலிய மற்றத் தத்துவங்களெல்லாம் மூடமாகிய கருவிகளேயல்லது அறிவாகிய ஆன்மாக்களல்ல. ஆகலில் சுகதுக்கங்களை அறிவாகிய ஆன்மாக்கள் அனுபவிக்குமே யல்லது மூடமாகிய தத்துவங்கள் அனுபவிக்க அறியா. மனமுதலாகிய கரணங்களும் கண்முதலாகிய இந்திரியங்களும் சீவர் வாழ்க்கைக்குக் கடவுள் அருளால் கட்டிக் கொடுக்கப்பட்ட சிறிய வீட்டின் கருவிகளாகும். இன்ப துன்பங்களை வீட்டிலிருக்கின்றவன் அனுபவிப்பானல்லது வீட்டின் கருவிகளாகிய மண் கல் மரம் கால் தீ நீர் முதலியவைகள் அனுபவிக்க அறியமாட்டா.

அன்றியும் காசத்தினால் ஒளிமழுங்கப்பட்டு உபநயனங்களாகிய கண்ணாடியால் பார்க்கின்ற கண்கள் துன்ப விஷயத்தைக் கண்டபோது அக்கண்கள் நீர் சொரியுமே யல்லது கண்ணாடி நீர் சொரியாது. ஆகலில் ஆன்ம திருஷ்டிக்கு உபநயனங்களாக விருக்கிற மனமுதலிய கருவிகள் சுகதுக்கங்களை அனுபவிக்க அறியா வென்றறிய வேண்டும். ஒரு சீவனுக்குச் சுகம் நேரிட்டபோது மனம் மகிழ்கின்றது. துக்கம் நேரிட்டபோது மனந் தளர்கின்றது. என்றால் சுகதுக்கங்களை அம்மனம் அனுபவிப்பதாக அறியப்படாதோ என்பவர்க்கு உத்தரம் யாதென் றறியவேண்டில்:- பளிங்கு வீட்டினுள் இருக்கின்ற வீட்டுத் தலைவனுடைய தேகவிளக்கமும் தேகச்சோர்வும் அந்த வீட்டிற் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலவும், கண்களின் மலர்ச்சியுஞ் சோர்வும் அக்கண்களிலிட்ட உபநயனங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலவும், சுகதுக்கங்களால் ஆன்மாவுக்கு உண்டாகின்ற மகிழ்ச்சியும் தளர்வும் மனம் கண் முதலிய கரணேந்திரியங்களிற் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுகின்றது.

அன்றியும், ஒரு வீட்டினுள் வைத்த தீபமானது மிகுந்த விளக்கமுள்ளதாக விளங்குகின்றபோது அந்த வீடும் அந்த வீட்டின் கருவிகளும் மிகவும் விளக்கமுள்ளதாக விளங்குகின்றன. அந்தத் தீபம் விளக்கம் குறைகின்றபோது வீடும் வீட்டிலுள்ளவைகளும் விளக்கம் குறைகின்றன.

ஆகலில், சுகதுக்கங்கள் மனத்துக்கு அனுபவமல்ல வென்றும் ஆன்மாவுக்கே அனுபவமென்றும், அனுபவத்திற்குக் கரணேந்திரியங்கள் ஆன்மாவிற்கு உபகாரக் கருவிகள் என்றும் பிரமாணிப்பதே உத்தரமென் றறியவேண்டும்.

கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி கொலை பிணி முதலியவற்றால் மிகவுந் துன்பப்படுவது எதனாலென்றறிய வேண்டில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் விட்டுக் கடின அறிவுள்ளவர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால் கடவுள் விதித்த அருளாக்கினைப்படி பசி கொலை பிணி முதலியவற்றால் மிகவுந் துன்பப்படுகின்றார்களென் றறியவேண்டும்.

முன்தேகம் உண்டென்பது எப்படியென் றறியவேண்டில்:- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த ஒரு சமுசாரி அதற்கு முன்னும் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனம் செய்திருந்தானென்றும், வீடில்லாமல் குடித்தனம் செய்ய மாட்டானென்றும், பின் வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் திரும்ப வேறொரு வீட்டில் குடிபோவா னென்றும், தனக்கென்று சுதந்தரமாக ஒரு வீடு கட்டிக்கொண்டால் முன்போல் குடிக்கூலி கொடுத்துக் குடிபோவதைத் தவிர்வா னென்றும் அறிவதுபோல; இந்தத் தேகத்தில் ஆகாரக்கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சீவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக்கூலி கொடுத்துச் சீவித்திருந்தா னென்றும், தேகமில்லாமல் சீவித்திருக்க மாட்டானென்றும், இந்தத் தேகத்திலும் கலகம் நேரிட்டால் இன்னும் வேறொரு தேகத்திற் குடிபோவா னென்றும், தனக்கென்று சுதந்தரமாக நித்தியமாகிய அருட்டேகத்தைப் பெற்றுக் கொண்டால் பின்பு வேறொரு தேகத்தில் குடிபோக மாட்டானென்றும் அறியவேண்டும்.

சிலர் முன்தேகம் எடுத்ததும் பின்தேகம் எடுப்பதும் இல்லை. இப்பொழுது எடுத்த தேகம் அழிந்தால் தேகியும் அழிந்துவிடுவானென்றும், சிலர் முத்தியடைவா னென்றும், சிலர் பாவ புண்ணியங்களை எக்காலத்தும் அனுபவிப்பா னென்றும், சிலர் தேகம் இல்லாமல் தேகம் அழிந்தவிடத்தி லிருப்பானென்றும் பலவாறு வாதிப்பது எதனாலென்றறியவேண்டில்:- அவரவர்களும் தேகமே ஆன்மாவென்றும் போகமே முத்தியென்றும் கொள்ளப்பட்ட லோகாயத மதத்தாரது கொள்கைக்குச் சம்பந்தப்பட்டவர்க ளாதலால், மூடமாகிய தேகத்தில் அறிவாகிய ஆன்மா ஒருவன் உண்டென்றும் அவனுக்குப் பந்த முத்தி உண்டென்றும் முத்தியடைகின்ற பரியந்தம் பந்த விகற்பத்தால் வேறுவேறு தேகத்தை எடுப்பானென்றும் பிரத்யட்ச அனுமான முதலிய பிராமணங்களால் உண்மையை அறிந்துகொள்ள மாட்டாதவர்க ளென்றும், அவர்கள் கொள்கைக்குப் பிரமாணமும் யுக்தியும் அனுபவமும் இல்லை யென்றும் அறியவேண்டும்.

இல்லை யென்பது எப்படி யென் றறியவேண்டில்:- சீவர்கள் தங்கள் தங்கள் சுதந்தரத்தாலே தேக போகங்களை யடைகின்றார்களென்றால், தங்கள் தங்கள் இச்சைக் கடுத்த தேகங்களையும் போகங்களையும் அடையவேண்டும். அப்படி யின்றிச் சிலர் இச்சைக்கடுத்த பழுதற்ற அங்கமுள்ளவர்களாகவும் சுகங்களை யனுபவிக்கின்றவர்களாகவும் சிலர் இச்சைக்குஅடாத பழுதுள்ள அங்கமுள்ளவர்களாகவும் துக்கங்களை அனுபவிக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகலில், சீவர்கள் தேகபோகங்களைத் தங்களிச்சையால் அடைந்தவர்களல்லவென்றும்; அவரவர்கள் அப்படி அப்படி யடைவது இயற்கை என்றால், இயற்கை என்பது எக்காலத்தும் வேறுபடாமல் ஒரு தன்மையாக இருத்தல் வேண்டும் அப்படி ஒரு தன்மையாக இராமல் பல வேறுவகைப்படுதலால் இயற்கையல்ல வென்றும்; கடவுள் இச்சை யென்றால் கடவுள் கருணையும் நீதியும் உடையவராதலில் எல்லாச் சீவர்களுக்கும் ஒரு தன்மையாகச் சுக அனுபவங்களையே அடைவிக்கவேண்டும்; அப்படி யடைவிக்காமையால் கடவுளிச்சை யல்ல வென்றும்; கடவுளருளால் சிருஷ்டித்த முதல் சிருஷ்டியில் தமது இயற்கையின்பத்தை அடையும்படி விதித்த விதிகளைப் பழமையாகிய மல வாசனையால் முயற்சி தவறினபடியால், அந்த அநாதிமல வாசனையின் முயற்சி பேதங்களால் பின் பல தேச போகங்கள் இரண்டாவது சிருஷ்டியில் நேரிட்ட தென்றும் பிரமாணித் தறிய வேண்டும்.

எடுத்துக்கொண்ட தேகம் தவறினால் வேறு தேகம் எடுப்பதில்லையென்றால், முதல் சிருஷ்டி தொடங்கி இதுவரையில் அழிந்த தேகங்களுக்கு அளவில்லை. அப்படியே ஆன்மாக்களுக்கும் அளவில்லை; ஆகவே இனி ஆன்மாக்கள் தேகங்களை எடுக்காமலிருக்க வேண்டும். அப்படியில்லை; தேகங்களை எடுத்துக்கொண்டே யிருக்கிறார்கள். ஆயின் ஆன்மாக்களை நூதன நூதனமாகச் செய்து அது அதற்கு நூதன நூதனமாகத் தேகங்களை வருவிப்பதென்றால்; நூதன நூதனமாகத் தேக மாத்திரம் செய்யக்கூடும்; தேகத்துள்ளிருக்கிற ஆன்மாவை நூதனமாகச் செய்யப்படாது; ஆன்மா எக்காலத்தும் உள்ளதாய் விளங்கப்பட்டது. அது தோன்றுதலும் அழிதலுமில்லை. அதை ஆக்கவும் அழிக்கவும் படாது. ஆன்மாக்களும் குடத்தைப்போல் செய்யப்பட்ட தானால், சுக துக்கங்களை அனுபவிக்க அறியாது, புண்ணிய பாவங்களை அடைய மாட்டாது. குடம் அழிவதுபோல் அழிந்து போய்விடும். அழியுமானால், பந்த முத்திகளுமில்லை; புண்ணிய பாவங்களு மில்லை. ஆகலால் குடம் உடைகின்ற போது குடத்தினுள் இருந்த காற்றும் ஆகாயமும் உடையாமலிருப்பது சிறுவர்களுக்கும் தெரியும். ஆகலில் தேகம் அழியும் போது தேகத்தினுள் இருக்கின்ற ஆன்ம விளக்கமும் கடவுள் விளக்கமும் அழியாதென்றும், ஆன்மாக்கள் முயற்சி பேதத்தால் தேக போக பேதங்களை யடைவது உண்மை யென்றும் யுக்தியால் அறியவேண்டும்.

ஒரு தாய்தந்தைகளுக்கு ஒரு காலத்தில் இரட்டைப் பிள்ளை பிறக்கின்றது. அவற்றில் ஒரு பிள்ளை சிவந்தது. ஒரு பிள்ளை கறுத்தது. ஒரு பிள்ளை அங்கப் பழுதுள்ளது, ஒரு பிள்ளை அங்கப்பழுதில்லாதது; ஒரு பிள்ளை பால் குடிக்கின்றது, ஒரு பிள்ளை பால் குடிக்கில் சத்தி* பண்ணுகின்றது. ஒரு பிள்ளை வியாதியுள்ளது. ஒரு பிள்ளை வியாதியில்லாதது; ஒரு பிள்ளை இரண்டு வயதில் பேசுகின்றது. ஒரு பிள்ளை பேசத் தெரியாம லிருக்கின்றது. இந்த இரட்டைப் பிள்ளைகளுக்கு இந்த பேதம் இவ்விடத்தில் யாதொரு ஏதுக்களு மில்லாமல் வந்ததை ஊன்றி விசாரிக்கில், முன் பிறப்பில் எடுத்த தேகத்தின் கர்மமாகிய முயற்சி பேதங்களென்றும்; இந்த இரட்டைப் பிள்ளைகளுக்கு மூன்று வயதில் விளையாடும்போது தாய்தந்தைகள் தனித்தனி கொடுத்த தின்பண்டங்களை வைத்துத் தின்னுகிற தருணத்தில், இவ்விரண்டு பிள்ளைகளும் தவிர வேறு பிள்ளையொன்று வந்தால் அதைக் கண்டு இவ்விருவரில் ஒரு பிள்ளை தன் கையிலிருக்கின்ற தின்பண்டத்தைக் கொடுக்கின்றது. மற்றொரு பிள்ளை கொடுக்கப்படாதென்று தடுக்கின்றது. ஒரு பிள்ளை புத்தகத்தை எடுத்துச் சிறுவர் படிக்கின்றது போல் படிக்கின்றது, மற்றொரு பிள்ளை புத்தகத்தைப் பிடுங்கியெறிந்து படிக்கப்படாதென்று அடிக்கின்றது. ஒரு பிள்ளை பயப்படுகின்றது. மற்றொரு பிள்ளை பயப்படாம லிருக்கின்றது. இப்படியே இந்தப் பிள்ளைகளுக்குத் தயை அன்பு அறிவு செய்கை முதலியவைகள் தாய் தந்தையர்கள் கற்பியாத காலத்திற்றானே உள்ளதாகவும் இல்லதாகவும் எப்படி வந்ததென்று ஊன்றி விசாரிக்கத் தொடங்கில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் முன் பிறப்பில் எடுத்த தேகத்திலிருந்த வாசனை இந்தப் பிறப்பில் இந்தத் தேகத்தில் கற்பியாமல் வந்ததென்றும் அனுபவத்தால் கருதி யறியவேண்டும். இப்படி யறிந்தால் சீவர்களுக்கு முன்னும் பின்னும் தேகமுண்டென்பது நன்றாகத் தெரியும். இப்படி யறியமாட்டாமையால் பிறப்பில்லை என்கின்றார்களென் றறியவேண்டும்.

* சத்தி - வாந்தி

அன்றி, இந்தத் தூலதேகம் அழியாமலிருக்கிறபோதே சொப்பனத்தில் ஆன்மா வேறு தேகமெடுத்துப் பல பல விசித்திரங்களையனுபவிக்கின்ற தானால், இந்தத் தேகம் நீங்கும் போது வேறு தேகமெடுத்து வாசனைக் கடுத்த அனுபவங்களை அனுபவிக்கு மென்பதைச் சொல்லவேண்டுவ தில்லை. அன்றி, சித்தி விசேஷத்தால் இந்தத் தேகத்திலிருந்த ஒருவன் இந்தத் தேகத்தைவிட்டு வேறு தேகத்திற்குப் பிரவேசிக்கின்றான் என்றால், இந்தத் தேகம் அழியும்போது இதிலிருந்த ஆன்மா கன்ம பேதத்தால் வேறு தேகத்தில் பிரவேசிக்கு மென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

அன்றி, ஒரு பட்சியானது கால வேற்றுமையாலும் குண வேற்றுமையாலும் முன் முட்டை என்கின்ற ஒரு தேகத்திலிருந்து பின்பு குஞ்சு என்கின்ற மற்றொரு தேகத்தில் வருகிறதானால், ஆன்மாக்கள் கர்ம பேதத்தால் இந்தத் தேகத்திலிருந்து வேறு தேகத்தில் வருமென்பது சொல்லவேண்டுவதில்லை. அன்றி, ஒரு குளவியால் ஒரு கிருமி புழுவென்கின்ற தேகத்திலிருந்து குளவியென்கின்ற தேகத்தில் வருமேயானால், கருமத்தினால் ஒரு ஆன்மா ஒரு தேகத்திலிருந்து மற்றொரு தேகத்தில் வருமென்பதைச் சொல்லவேண்டுவதில்லை.

அன்றி, ஒரு ஆன்மா ஒரு பிறப்பிற்றானே சிசுதேகத்திலிருந்து பாலதேகத்திலும் பாலதேகத்திலிருந்து வாலிபதேகத்திலும் வாலிப தேகத்திலிருந்து வார்த்திப தேகத்திலும் வருமானால், அந்த ஆன்மா கன்மபேதத்தால் வேறு பிண்டதேகத்தில் வருமென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அன்றி, மந்திர தந்திர பேதத்தால் ஒரு பிறப்பிற்றானே பெண் தேகத்திலிருந்து ஆண் தேகத்திலும் ஆண்தேகத்திலிருந்து பெண்தேகத்திலும் ஆன்மாக்கள் வருமானால், கர்மபேதத்தால் வேறு தேகம் எடுக்கும் என்பது சொல்ல வேண்டுவதில்லை.**

** ச. மு. கந்தசாமி பிள்ளையவர்களின் திருவருட்பாப் பதிப்பில் (1924) இதுவரையுமே உள்ளது. இதற்கு மேல் இல்லை.

அன்றி, ஒரு தாவர தேகத்திலிருந்த ஆன்மாவானது அந்தத் தேகத்திற்றானே மரகதக்கிருமி என்கின்ற புழுதேகத்தில் வருகின்றது. அன்றி, ஓர் எறும்பானது அந்தத் தேகத்திலிருந்தே பிபீலிக பட்சி என்கின்ற தேகத்தில் வருகின்றது. அன்றி ஓர் பாம்பானது அந்தத் தேகத்திலிருந்தே சர்ப்ப பட்சியென்கின்ற வேறொரு தேகத்தில் வருகின்றது.

இப்படியே மனிதர் மிருகம் பறவை ஊர்வன நீர்வாழ்வன தாவர முதலிய அந்தந்தத் தேகங்களிலிருக்கின்ற ஆன்மாக்கள் அந்தந்தத் தேகத்திலிருந்தே வேறு தேகங்களை யெடுக்கின்றனவானால், அந்தந்தத் தேகங்களழியும்போது வேறு தேகங்க ளெடுக்குமென்பது சொல்லவேண்டுவதில்லை.

சிலர் 'முன்தேகம் உண்டென்பது உண்மையானால், அந்தத் தேகத்தில் நீ யார்? உன் சரிதமெது? சொல்' என்கின்றார்களே; அவர் கேள்விக்கு உத்தரம் என் னென்றறிய வேண்டில்:- எழுபது வயதுள்ள ஒருவனைப் பார்த்து 'உனக்கு ஐந்து வயதில் உன்சரித்திரம் என்ன' வென்று கேட்டபோது, 'நேற்றைப் பொழுதில் நடந்த என் சரித்திரம் இன்றைப் பொழுதில் அவஸ்தையால் சொல்லத் தெரியாது விழிப்பே னென்றால், என் ஐந்து வயதின் சரித்திரத்தை எப்படிச் சொல்ல மாட்டுவேன்? நீ எப்படிக் கேட்கக்கூடும்?' என்கின்றான். ஒரு பிறப்பில் நடந்த அவனது சரித்திரங்களையே அவஸ்தை பேதங்களால் அறிந்து சொல்ல மாட்டாமல் திகைப்புண்டான தென்றால், முன் தேகத்தில் நடந்த சரித்திரங்களை அநேக அவஸ்தையில் திகைக்கின்ற நாம் எப்படியறிந்து சொல்லக் கூடும் என்பதே உத்தரம் என்றறியவேண்டும்.***

*** சென்னை சன்மார்க்க சங்கத்தின் திருவருட்பாப் பதிப்பில் இது வரையுமே உள்ளது. இதற்குமேல் ஆ. பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பில் மட்டுமே உள்ளவை.

சீவர்கள் முன்தேகத்திலே செய்த புண்ணிய பாவ கர்மங்கள் இந்தத் தேகத்திலும் வரும் என்பது எப்படி என்று அறிய வேண்டில்:- ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப்பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டுக்குக் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் அந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல, ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் பாவ கர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோது அந்தப் பாவ கர்மங்கள் அந்தத் தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென்றும் புண்ணிய கர்மங்களும் இப்படியே என்றும் அறியவேண்டும்.

முன்பிறப்பில் சீவகாருணிய ஒழுக்கத்தை விட்டுத் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களை இந்தப் பிறப்பில் பசி தாகம் முதலியனவற்றால் துக்கப்படச் செய்வது கடவுள் அருளாக்கினை நியதி என்றால், அந்தச் சீவர்கள் விஷயத்தில் தயவு வைத்து ஆகாரம் முதலியவை கொடுத்து அவர்கள் துக்கத்தை மாற்றுவது கடவுள் அருளாக்கினைக்கு விரோதமாகாதோ என்கின்ற சிறிய கேள்விக்கு உத்தரம் எது என்று அறிய வேண்டில்:- அரசன் தன் கட்டளைக்கு முழுதும் விரோதித்துக் கால்களுக்கு விலங்கிடப்பட்டுச் சிறைச்சாலையி லிருக்கின்ற பெரிய குற்றவாளிகளுக்கும் தன் சேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக்கின்றான். அதுபோல், கடவுள் தம் கட்டளைக்கு முழுதும் விரோதித்துப் பலவகையால் பந்தம் செய்யப்பட்டு நரகத்தில் இருக்கிற பாவிகளுக்கும் தம் பரிவார தேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக்கின்றார். அரசன் தன் கட்டளைப்படி நடவாமல் வேறுபட்ட சாதாரணக் குற்றவாளிகளைத் தன்னால் அவர்கள் பெறத்தக்க லாபத்தைப் பெறவொட்டாமல் உத்தியோகத்தினின்றும் நீக்கி, அவர்களுக்கு நல்லறிவு வருகிற நிமித்தம் அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்கு வெளிப்படுத்துகின்றான். அவர்கள் உத்தியோகம் இழந்தபடியால், சுகபோஜனம் முதலிய போகங்களையும் இழந்து ஊர்ப்புறங்களில் போய் ஆகாரம் முதலியவை குறித்து அலைந்து வருந்துகின்றார்கள். அப்போது, தயவுள்ளவர்கள் கண்டு ஆகாரம் முதலியவை கொடுக்கின்றார்கள். அதை அரசன் கண்ட காலத்திலும் கேட்டகாலத்திலும் ஆகாரம் கொடுத்தவர்களைத் தயவுள்ள நல்ல சமுசாரி என்று சந்தோஷ’த்து மேலான நிலையில் வைத்து உபசரிக்கின்றானல்லது கோபிக்கவில்லை. அதுபோல, கடவுள் தம் கட்டளைப்படி நடவாத சாதாரண குற்றமுடைய சீவர்களைத் தமது சக்தியால் அவர்கள் பெறத்தக்க இன்பங்களைப் பெற வொட்டாமல் தாம் கொடுத்த சௌக்கிய புவன போகங்களை விடுவித்து, அந்தச் சீவர்களுக்கு நல்லறிவு வருவிக்கும் நிமித்தம் அந்தத் தேகத்தினின்றும் நீக்கி வேறொரு தேகத்தில் விடுகின்றார். அந்தச் சீவர்கள் சௌக்கிய புவன போகங்களை இழந்தபடியால், சௌக்கிய போஜனம் முதலியவற்றையும் இழந்து வேறு வேறு இடங்களில் ஆகாரம் முதலியவை இல்லாமல் வருந்துகின்றபோது, தயவுள்ளவர்கள் அந்த வருத்தத்தைக் கண்டு ஆகாரம் முதலியவை கொடுக்கின்றார்கள். அப்படிக் கொடுக்கின்றவர்களை நல்ல தயவுள்ளவர்கள், மேன்மேலும் சுகத்தை அடையக் கடவர்கள் என்று சந்தோஷ’த்து மேல்நிலையில் வைத்து உபசரிப்பாரல்லது கோபிக்க மாட்டார். ஆதலால், கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்தில் சீவர்கள் தயவு வைத்து உபசரிப்பதே சம்மதமென்று உண்மையறிந்து சொல்லுவதே உத்தரமென்று அறியவேண்டும்.

இந்தச் சீவகாருணிய ஒழுக்கத்தால் இகலோக ஒழுக்கம் விளங்குகின்றது. இல்லையாகில், இகலோக ஒழுக்கம் எவ்வளவும் விளங்க மாட்டாது. சீவகாருணியம் இல்லாதபோது அறிவும் அன்பும் தோன்றா. அவை தோன்றாதபோது கண்ணோட்டமும் ஒருமையும் உபகாரமும் விளங்கா. அவை விளங்காதபோது வலிய சீவர்களால் எளிய சீவர்கள் ஒழுக்கம் பொறாமை முதலானவையால் தடைப்பட்டு அழிந்துபோம். பின்பு வலிய சீவர்கள் ஒழுக்கங்களும், மதத்தினால் தாமச ஒழுக்கங்களாகி மாறுபட்டு அழிந்து போகும். சீவகாருணிய ஒழுக்கம் சிறிதும் இல்லாத புலி சிங்கம் முதலிய மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவே இல்லை. சீவகாருணியம் இல்லாத மனிதர்கள் வழங்குமிடத்திலும் இகலோக ஒழுக்கமும் வழங்கவே மாட்டாதென்று அறியவேண்டும். பரலோக ஒழுக்கமும் சீவகாருணியத்தால் வழங்குகின்றது. அது இல்லையாயின் பரலோக ஒழுக்கமும் வழங்க மாட்டாது. சீவகாருணியம் இல்லாதபோது அருள் விளக்கம் தோன்றாது. அது தோன்றாதபோது கடவுள்நிலை கைகூடாது. அது கூடாதபோது முத்தியின்பம் ஒருவரும் அடையவே மாட்டார்கள். அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டா தென்று அறியவேண்டும்.

சீவகாருணிய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துஷ்டப் பிறவிகளே பெருகித் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன. முன்தேகத்தில் சீவகாருணியம் இல்லாத பாவ சீவர்கள் எல்லாம் அவரவர் பாவச் செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரண்யவாசிகளாகவும், சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட மிருகங்களாகவும், சிலர் காக்கை கழுகு முதலிய பட்சி சண்டாளங்களாகவும், சிலர் பாம்பு தேள் முதலிய துர்ச்செந்துக்களாகவும், சிலர் முதலை சுறா முதலிய கடின செந்துக்களாகவும், சிலர் எட்டி கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். ஆகலால், தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன வென்று அறியவேண்டும்.

சீவகாருணியம் கடவுள் அருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமாவதுமன்றி அந்த அருளின் ஏகதேசவிளக்கம் என்றும், சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆகலால் அந்த இயற்கை விளக்கம் இல்லாத சீவர்களுக்குக் கடவுள்விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாதென்றும் அறியவேண்டும்.

சீவகாருணியத்திற்கு லட்சியம் எது என்று அறியவேண்டில்:- ஆன்மாக்கள் எல்லாம் இயற்கை உண்மை ஏகதேசங்களாயும் இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கறிவாய் விளங்குதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும் இருக்கின்றன என்றும் அந்த ஆன்மாக்கள் சீவர்களாகி அதிகரிப்பதற்குப் பூதகாரியதேகங்களே உரிமையாகி இருக்கின்றன என்றும், அந்தத் தேகங்களில் ஆன்மாக்கள் சீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்மவிளக்கம் மறைபடும் என்றும், அது மறைவில் அருள் விளக்கம் வெளிப்படாதென்றும், வெளிப்படாதபோது மூடம் உண்டாகும் என்றும், அதுவே ஆன்மாக்களுக்குப் பந்தமாகும் என்றும் அது பற்றி அவசியம் பூதகாரியதேகம் வேண்டுமென்றும், பூதகாரிய தேகங்களுக்கு மாயை முதற்காரண மாதலால், அந்த மாயையின் விகற்ப ஜாலங்களாகிய பசி, கொலை, தாகம், பிணி, ஆபத்து, பயம், இன்மை, இச்சை என்பவைகளால் அந்தத் தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடும் என்றும், அப்படி அபாயங்கள் நேரிடாமல் கரணேந்திரிய சகாயங்களைப் பெற்ற தம் அறிவைக்கொண்டு சர்வ ஜாக்கிரதையோடு முயற்சி செய்து தடுத்துக் கொள்வதற்குத் தக்க சுதந்தரம் சீவர்களுக்கு அருளால் கொடுக்கப்பட்டதென்றும், அந்தச் சுதந்தரத்தைக் கொண்டு சீவர்கள் எல்லாம் தேகங்களிலிருந்து அபாயங்களை நீக்கி ஆன்மலாபத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்யக் கடவார்கள் என்றும், மேற்குறித்த பசி கொலை தாகம் பிணி ஆபத்து பயம் இன்மை இச்சை என்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க சுதந்தரமில்லாமல் வருந்துகின்ற சீவர்கள் விஷயத்தில் அவை நிவர்த்தி செய்யத்தக்க சுதந்தரமுள்ள சீவர்கள் காருண்யத்தால் நிவர்த்தி செய்விக்க வேண்டும் என்றும், அப்படி நிவர்த்தி செய்விப்பதில் பசியினாலும் கொலையினாலும் வருந் துன்பங்களை நிவர்த்தி செய்விப்பது தலைமையான காருண்யம் என்றும், அது தவிர மற்றவைகளால் வருந் துன்பங்களை மாற்றுவது அபர சீவகாருணியம் என்றும், அது இவ்வுலக இன்பத்தை மாத்திரம் சிறிது உண்டு பண்ணுமென்றும், பசியினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந் துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பது பரசீவகாருணியம் என்றும், அது இவ்வுலகஇன்பம் எல்லாவற்றையும் அளவிறந்த சித்தி இன்பங்களையும் எக்காலத்தும் அழியாத முத்தியின்பத்தையும் அருளால் அடைவிக்கும் என்றும், அன்னிய சீவர்களுக்கு நேரிடுகிற மேற்குறித்த அபாயங்களை நிவர்த்தி செய்விப்பதற்குத் தக்க சுதந்தரமும் அறிவும் இருந்தும் அவ்வாறு செய்யாமல் வஞ்சித்தவர்களுக்கு இவ்வுலக இன்பம் அவ்வுலக இன்பத்தோடு மோட்ச இன்பத்தை அனுபவிக்கச் சுதந்தரத்தை அடையப்படுவதில்லை என்றும், தற்காலத்தில் அனுபவிக்கின்ற புவன போக சுதந்தரங்களையும் இழந்துவிடுவார்கள் என்றும் கடவுளருளால் விதிக்கப்பட்டிருக்கின்றபடியால் அபாயங்களை நிவர்த்தி செய்து கொள்ளத் தக்க அறிவும் சுதந்தரமும் இல்லாத சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்கத் தக்க அறிவும் சுதந்தரமும் உள்ளவர்கள் வஞ்சியாமல் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு லக்ஷியம் என்று அறியவேண்டும்.

பசி, கொலை, தாகம், பிணி, ஆபத்து, பயம், இன்மை, இச்சை என்பவைகளால் வரும் அபாயத்தை நிவர்த்தி செய்விப்பது சீவகாருணியத்திற்கு லக்ஷியமாக இருக்கவும். இவ்விடத்துப் பசியினாலும் கொலையினாலும் வரும் அபாயங்களை மாத்திரம் நிவர்த்தி செய்விப்பது தலைப்படு காருணியம் என்று குறித்தது ஏன் என்று அறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தில் பரசீவகாருணிய மென்றும் அபரசீவகாருணியம் என்றும் இருவகையாம். அவற்றில் பசிநீக்கலும் கொலைநீக்கலும் பரசீவகாருணியம். மற்றவை அபரசீவகாருணியம். ஆகலில், பரசீவகாருணியம் விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்று அறியவேண்டும். அன்றியும், பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குவதற்குத் தண்­ர் கொடாமலிரார்கள். தண்­ர் கொடுப்பது பிரயாசமுமல்ல. தண்­ர் ஏரி, குளம், கால்வாய் முதலிய இடங்களிலும் இருக்கின்றது.


திருச்சிற்றம்பலம்
ஜீவகாருண்ய ஒழுக்கம் மூன்றாவது பிரிவு முற்றிற்று
சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம் முற்றிற்று