திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய தனிப்பாடல்கள்

1 குடும்ப கோஷம்
2 குருட்டாட்டம்
3 குடும்ப கோரம்
4 திருமுக அகவல்
5 திருமுகப் பாசுரங்கள்
6 திருமுகப் பாடல்கள்
7 சாற்றுக் கவிகள்
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

1. குடும்ப கோஷம் (411)

(411) இது அடிகள் இளமையில் சென்னையில் வதிந்தபோது ஒற்றியூர் வழிபாட்டுக் காலத்தில் இயற்றத் தொடங்கிய செய்யுள் நூல். 19 படலங்களைக் கொண்டது.
எட்டாம் படலத்தின் பெயரே நூற்பெயராக அமைந்துள்ளது. முதல் இரண்டு படலங்களே (116 பாடல்கள்) செய்யப்பெற் றுள்ளன. ஏனைய 17 படலங்களும் பாடப் பெறவில்லை. படலப் பெயர்கள் மட்டுமே குறிக்கப்பெற் றுள்ளன. இப்படலங்களும் பாடி, நூல் முற்றுப்பெற்றிருக்குமாயின் ஆயிரம் பாடல்களுக்கு மேற் கொண்டதோர் அரிய சாதன நூலாக விளங்கும். பல பொருள்களும் சாதன முறைகளும் அனுபவங்களும் வெளிப் பட்டிருக்கும்.

இந்நூல் முற்றும் கற்பனை அன்று. அடிகள் உண்மை வரலாற்றையே கற்பனை நயத்துடன் கூறுகின்றார். சஞ்சலன் வரலாறும் அடிகள் வரலாறும் பெரிதும் ஒத்திருக்கிறது. சென்னை பதிப்பு, ஓஇக்குடும்ப கோஷம் வள்ளற்பெருமானைப் பற்றியதன்றுஔ என்று கூறும். தம் வரலாற்றையும் அனுபவங்களையும் புனைபெயர்களில் பல படலங்களாக அடிகள் இளமையில் பாடத் தலைப்பட்டனரோ எனக் கருத இடமுண்டு. நூலை முடிக்காது நிறுத்திவிட்டமை இக்கருத்தை மேலும் வலியுறுத்தும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காப்பு
1 பூவுலகும் பொன்னுலகும் புகழ்தவத்தில்
பெரியர்உளம் புனித மான
தேவுலகென் றமர்ந்தருளும் சிவகளிற்றை
ஐந்துகரத் தெய்வம் தன்னை
மூவுலகும் துதிஆறு முகத்தமுதை
எம்குருவை முக்கட் கோவை
நாவுலகு நயப்பெய்த வழுத்திஎம
துறுவினையின் நவைகள் தீர்ப்பாம்.
1
2 ஆனைமுகத் தனைஆறு முகத்தனைஐம்
முகத்தனைப்பா லவளைப் பூதச்
சேனைமுகத் தலைவனைச்சண் டேசுரனைக்
கவுணியகோத் திரநம் கோவைச்
சோனைமுகத் தருள்திருத்தாண் டகம்புனைந்த
அப்பனைவன் தொண்டத் தேவை
வானைமுகத் தவர்வழுத்தும் வாதவூர்
அடிகளையாம் வணங்கி வாழ்வாம்.
2
3 தெறுங்கைஆ னனம்உரித்த சிவனேஇக்
குடும்பத்தின் செய்கை சொல்லப்
பெறுங்கையாம் வகைஒன்றும் தெரியாமே
சொலப்புகுந்த பேதை யேனைக்
குறுங்கையால் மலைஅணைத்துக் கொளநினைத்தோன்
என்கேனோ கொளும்தூ சின்றி
வெறுங்கையால் முழம்போடும் வேலையிலா
வீணன்என விளம்பு கேனோ.
3
4 சீர்பாட்டில் சிறந்தசிவ குருவேஇக்
குடும்பத்தின் திறம்பா டற்கே
ஓர்பாட்டிற் கொருகோடிப் பசும்பொன்வரும்
ஆனாலும் உன்பேர் அன்றிப்
பார்பாட்டில் சிறுதெய்வப் பேர்களைமுன்
னிலைவைத்துப் பாடேன் இந்த
நேர்பாட்டில் பிழைகுறியேல் அருட்செவிக்கேற்
பித்தல்அருள் நீர்மை யன்றோ.(412)
4
(412). நிலைமையன்றோ - பொ. சு; பி. இரா., ச. மு. க.
அவையடக்கம்

கலிநிலைத்துறை

5 மாநில மீதிந் நூன்முறை செய்தது மனைமேவும்
நான்எனில் நானே நாணமி லேனை நகுகின்றேன்
ஈனமில் புலவீர் என்னுள் அமர்ந்தருள் இறைஎம்மான்
தான்எனில் அடியேன் அவைசொல் அடக்கஞ் சதுரன்றே.
1


1. குருதரிசனப் படலம்

கலிவிருத்தம்
காப்பு
6 நீர்வளம் நிலவளம் நிறைந்த பொற்பது
கார்வளர் பொழில்புடை கவின்ற காட்சிய
தேர்வளர் நலனெலாம் என்றும் உள்ளது
சீர்வளர் தலங்களுள் திலகம் என்பது.
1
7 திருவளர் புயத்தனும் திசைமு கத்தனும்
தருவளர் மகத்தனும் சார்ந்து நாடொறும்
மருவளர் மலர்கொடு வழிபட் டெண்ணிய
உருவளர் சிறப்பெலாம் உற்ற மாண்பது.
2
8 அற்றமில் சண்பைய ராதி மூவரும்
சொற்றமிழ்ப் பதிகங்கள் தோறும் சேர்வது
நற்றவர் புகழ்வது நாயினே னுக்கும்
கற்றவர் உறவினைக் காட்டி நின்றது.
3
9 தவநெறி தழைத்துமெய்ச் சாந்தம் பூத்துவன்
பவநெறி காய்த்தருட் பழம்ப ழுத்திடும்
நவநெறி தரும்பர நவிற்றும் சைவமாம்
சிவநெறி தரும்தருச் சிறந்த சீரது.
4
10 சோலையும் தடங்களும் துரிசி லாஅறச்
சாலையும் மடங்களும் சத்தி ரங்களும்
பாலையும் பழத்தையும் பருகல் ஒத்தசொன்
மாலையும் தொடுப்பவர் வாழ்வும் உள்ளது.
5
11 அந்தணர் அறுதொழில் ஆற்றும் சால்பது
மந்தண மறைமுடி வழுத்தும் மாண்பது
சுந்தர நீற்றணி துலங்கும் அன்பர்கள்
வந்துவந் தனைசெய்து வசிக்கும் பேறது.
6
12 பூவெலாம் புதுமணம் பொலியும் ஒண்தளிர்க்
காவெலாம் சிவமணம் கமழு கின்றது
தேவெலாம் செறிவது சிவம்க னிந்தமெய்ந்
நாவெலாம் புகழ்வது நன்மை சான்றது.
7
13 சாலியும் போலிய தழைகொள் கன்னலின்
வேலியு முக்கனி விளைவும் தாழைகள்
கோலிய பொங்கரும் குறைவி லாதது
பாலியின் வடகரைப் படியின் மேலது.
8
14 எண்டிசை புகழநின் றிலங்கு கின்றது
அண்டர்கள் முடிவினும் அழிவி லாதது
தொண்டமண் டலவடற் றூய கீழ்த்திசை
கண்டல்சூழ் கடற்கரை காண உள்ளது.
9
15 திருமகள் கலைமகள் சிறந்த ஞானமாம்
குருமகள் மூவரும் கூடி வாழ்வது
தெருமரல் அகற்றும்எம் சிவபி ரான்மலை
ஒருமகள் உடனுறை ஒற்றி மாண்பதி.
10
16 அப்பெரும் பதியிடை அயன்முன் னாகிய
முப்பெருந் தலைவரும் முடிவ ணங்கிட
ஒப்பருஞ் சிவபிரான் உருவு கொண்டருள்
செப்பருங் கோயிலைச் சேர்ந்த சூழலில்.
11
17 கிள்ளைகள் ஆகமம் கிளக்கக் கேட்டதற்
குள்ளுணர் பூவைகள் உரைவி ரித்திடத்
தெள்ளிய மயிலினம் தேர்ந்துள் ஆனந்தம்
கொள்ளைகொண் டயல்நடம் குயிற்ற உள்ளது.
12
18 சைவயா கங்களும் சாற்று மற்றைய
தெய்வயா கங்களும் செய்ய ஓங்கிய
மைவிடாப் புகையொடு மழையும் கூடினும்
மெய்விடார் உளமென விளங்கு கின்றது.
13
19 கண்டவர் உளமெலாம் கட்டு கின்றது
தண்டமிழ்க் கவிதைபோல் சாந்தம் மிக்கது
விண்டயன் பதமுதல் விரும்பத் தக்கது
எண்டரும் தவம்அர சிருக்கும் சீரது.
14
20 வந்தியார் அமுதையும் வாங்கி உண்டருள்
அந்தியார் வண்ணர்தம் அருளில் நின்றது
நந்திஆச் சிரமமாம் நாமம் பெற்றது
நிந்தியா நெறியதோர் நிலையுண் டாயிடை.
15
21 வேதமும் ஆகம விரிவும் மற்றைநூற்
போதமும் மன்னுறப் போதிப் போர்களும்
வாதமும் விதண்டமும் மருவுறா(413) வகைப்
பேதமும் அபேதமும் பேசு வோர்களும்.
16
(413). மருளுறா - பொ. சு., பி. இரா., ச. மு. க.
22 பவமெலாம் தவிர்த்தருட் பதம்அ ளிப்பது
தவமலா திலைஎனச் சார்ந்து ளோர்களும்
அவமெலாம் அகன்றபின் அனுப விப்பது
சிவமலா திலைஎனச் சேர்ந்து ளோர்களும்.
17
23 ஞான யோகத்தினை நண்ணி னோர்களும்
மோனமே பொருள்என முன்னி னோர்களும்
வானமே பெறினும்இம் மாய வாழ்க்கையில்
ஊனமே இருத்தல்என் றுவட்டி னோர்களும்.
18
24 மறந்திலர் உலகர்இவ் வஞ்ச வாழ்க்கையைத்
துறந்திலர் என்எனச் சொல்கின் றோர்களும்
இறந்திலர் பிறந்திலர் இன்பம் எய்தினர்
வறந்திலர் தவர்என வகுக்கின் றோர்களும்.
19
25 தென்சொலும் வடசொலும் தெரிந்து ளோர்களும்
இன்சொலும் வாய்மையும் இசைக்கின் றோர்களும்
வன்சொலும் மடமையும் மறமும் வஞ்சமும்
புன்சொலும் உடையர்பால் பொருந்து றார்களும்.
20
26 கருநெறித் தமிழ்எலாம் கைய கன்றுமெய்த்
திருநெறித் தமிழ்மறை தேர்ந்து ளோர்களும்
அருநெறித் தனிஎழுத் தைந்தின் உட்பொருள்
குருநெறித் தகவுறக் குறிக்கின் றோர்களும்.
21
27 இரவொடு பகல்இலா திருக்கின் றோர்களும்
வரவொடு போக்கிலா வழிநின் றோர்களும்
கரவொடு மாயையைக் கடிந்த சீலரும்
உரவொடு மெய்ந்நிலை ஓங்கு வோர்களும்.
22
28 பொறிவழி மனம்செலாப் புனித சித்தரும்
அறிவழி அவ்வழி அகன்று ளோர்களும்
செறிவழி யாவகைச் சிறந்த முத்தரும்
குறிவழி திறம்புறாக் கொள்கை யோர்களும்.
23
29 மால்வகை முழுவதும் நீக்கி மன்னருள்
நூல்வகை ஞானத்தின் நுவலு கின்றதோர்
நால்வகை நிலைகளின் நண்ணு வோர்களும்
ஏல்வகை இணையடி ஏத்திச் சூழ்ந்திட.
24
30 தெள்ளிய அமுதவெண் திங்க ளோநறை
துள்ளிய நறுமணம் சூழ்ந்த லர்ந்திடும்
ஒள்ளிய கமலமோ என்ன ஓங்கிய
வள்ளிய திருமுக மண்ட லத்திலே.
25
31 கடைவரை நிறைபெறும் கருணை வெள்ளமேல்
மடைதிறந் தொழுகிவான் வழிந்து பாரெலாம்
தடைபடாத் தண்ணளி ததும்பி ஆனந்தக்
கொடைதரும் விழிமலர் குலவி வாழ்ந்திட.
26
32 சிறைதெறும் சிவசிவ சிவஎன் றன்பொடு
மறைமொழி சிறக்கும்வாய் மலரும் விண்ணக
நிறையமு தொழுகிவெண் ணிலவ லர்ந்தருள்
இறைபெறும் புன்னகை எழிலும் ஓங்கிட.
27
33 வேதபுத் தகம்திகழ் மென்கை யும்திருப்
பாதபங் கயங்களும் பரவு நீற்றொளி
போதஉத் தூளனம் பொலிந்த மேனியும்
ஓதுகல் மரங்களும் உருகத் தோன்றிட.
28
34 அருஞ்சிவ ஞானமும் அமல இன்பமும்
திருந்தஓர் உருக்கொடு சேர்ந்த தென்னவே
தரும்சிவ குருஎனும் தக்க தேசிகன்
இருந்தனன் இருந்தவா றிருந்த நாளினே.
29

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
35 ஒருநாளில் ஒருமகன்ஓர் பதினாறாண்
டகவைநல முடையான் ஒற்றித்
திருநாளில் எம்பெருமான் தியாகேசன்
திருப்பவனிச் சேவை செய்து
மருநாள மலர்த்தடம்சூழ்ந் தெழில்பெறும்அவ்
வாச்சிரம வனத்துட் போந்து
கருநாளின் கரிசறுக்கும் குருநாதன்
இருக்கைஎதிர் கண்டான் மன்னோ.
30
36 கண்டவன்அக் குருநாதன் கடைக்கணிக்கப்
பெற்றதனால் கடத்தில் சற்றே
திண்டகுதே றிடச்சிறிது தெளிநீர்போல்
தெளிந்தறிவு சிறிது தோன்றத்
தண்டம்எனக் கீழ்விழுந்து வணங்கிஎதிர்
நின்றுகரம் தலைமேற் கூப்பிப்
பண்டுறும்அன் பொடுவிழிகள் நீர்சொரிய
வியந்துதுதி பண்ணு வானால்.
31
37 கருணைநெடுங் கடல்என்கோ கல்லாலின்
அடிஅமர்ந்த கடவுள் என்கோ
அருணகிரிக் கருள்புரிந்த ஆறுமுகக்
குருஎன்கோ அமுதம் என்கோ
மருள்நலிய வரும்பிறவி மருந்தென்கோ
அடியேன்கண் மணிஎன் கோமெய்த்
தெருள்நிறைந்த சிவகுருவே நின்தனைஈண்
38 என்றானைக் கருணையொடும் சிவகுருஅங்
கெதிர்நோக்கி இளையோய் உன்றன்
நன்றான சரிதம்எது நவிலுதிஎன்
றுரைத்தருள ஞான யோகம்
குன்றாத குணக்குன்றே குறையாத
குளிர்மதியே குருவே என்றும்
பொன்றாத நிலைஅருள்வோய் கேட்டருள்க
எனவணங்கிப் புகல்வான் மாதோ.
33
39 கற்றவர்சூழ் இத்தலத்துக் கைங்கடிகை
எல்லைதனில்(414) கவின்சேர் சென்னை
உற்றடியேன் இருக்கும்ஊர் சூத்திரர்தம்
குலத்(து)ஆசை உடையான் என்னைப்
பெற்றவன்பேர் வினைச்சிஎனைப் பெற்றவள்பேர்
எனக்குமுன்னே பிறந்தார் மற்றும்
சுற்றமிக உடையேன்சஞ் சலன்எனும்பேர்
என்பெயராச் சொல்வ ராலோ.
34
(414). ஐங்கடிகை எல்லை - ஐந்து நாழிகை வழி.
40 குடிப்பேறில் தாய்முலைப்பால் ஏழாண்டு
மட்டுமிகக் குடித்து நாக்குத்
தடிப்பேறிற் றாதலினால் படிப்பேறிற்
றிலைஅடியேன் தனக்குக் கல்விப்
பிடிப்பேறிச் சிறியேன்முன் பிறந்தவர்தம்
பெயர்எழுதப் பெரிதும் கற்று
நடிப்பேறி னார்அவர்முன் நொடிப்பேற
நின்றேன் இந்நாயி னேனே.
35
41 தந்தைஉணர்ந் திவன்மிகநாத் தடிப்பேறி
னான்உடம்பும் தடித்தான் மற்றைப்
புந்தியிலும் காரிருப்புப் பொருப்புலக்கைக்
கொழுந்தானான் போதஞ் சாரா
மந்தன்எனப் பயின்றகலைச் சாலையினின்
றகற்றிஅவ்வை வாக்கு(415) நாடிப்
பந்தமனைப் பண்டமெலாம் கடைஉழன்று
சுமந்துவரப் பணித்தான் எந்தாய்.
36
(415). அவ்வை வாக்கு- பீரம்பேணி பாரம் தாங்கும்- கொன்றைவேந்தன்.
42 அண்ணுறும்என் தந்தைதாய்க் கடியனேன்
கடைப்பிள்ளை யான தொன்றோ
கண்ணுறுநற் கல்வியினும் கடைப்பிள்ளை
ஆனேன்பின் கருதும் வாழ்க்கை
நண்ணுறுபல் பண்டமெலாம் கொள்வதினும்
கடைப்பிள்ளை நானே ஆனேன்
உண்ணுறும்இவ் வுடலோம்பி ஒதியேபோல்
மிகவளர்ந்தேன் உணர்வி லேனே.
37
43 பெருஞ்செல்வப் பெருக்கத்தில் பிறந்தேன்நான்
பிள்ளையாப் பிறந்த நாள்தொட்
டிருஞ்செல்வத் திந்நாள்மட் டயல்வேறு
குறைசிறிதும் இல்லை எந்தாய்
அருஞ்செல்வம் எனும்கல்வி அறிவில்லாக்
குறைஒன்றே அடைந்திட் டேன்அவ்
வருஞ்செல்வத் தாசையுளேன் பேடிமணம்
நாடிமனம் வருந்தல் போன்றே.
38
44 இன்னவகை உழல்கின்றேன் இத்தலத்தில்
திருநாளென் றிசைக்கக் கேட்டிங்
கென்னனைய சிறுவர்களோ டெய்தினேன்
திருப்பவனி இனிது கண்டேன்
பின்னர்என துடனுற்றோர் பிரிந்தனர்நா
யடியேன்முன் பிறப்பிற் செய்த
தன்னனைய தவப்பயனால் தேவேநின்
திருச்சமுகம் தரிசித் தேனே.
39
45 ஈதெனது சரிதம்ஒரு தெய்விகத்தால்
களர்நிலத்தின் இடையே செந்நெல்
பேதமற முளைத்ததுபோல் தேவேநின்
திருச்சமுகப் பெருமை யாலே
மூதறிவு சிறிதென்னுள் முளைத்ததது
பயிராக முழுதுங் கல்விக்
காதலுறு சிறியேனைக் காத்தருள
வேண்டும்எனக் கழறி னானே.
40
46 அன்னவன்சொல் மொழிகேட்டுச் சிவகுருஅங்
கிளநிலா அரும்ப உள்ளே
புன்னகைகொண் டுன்னகத்தில் புரிந்ததுநன்
றாயினும்இப் போது நீஉன்
மன்னகருக் கேகிஅவண் தந்தைதாய்க்
குரைத்தவர்சம் மதம்பெற் றீண்டித்
தொன்னகருக் கெய்துதிஎன் றுரைத்தருளச்
சஞ்சலன்கை தொழுது சொல்வான்.
41
47 வேர்ப்புலகின் புவப்புறும்என் தந்தைதாய்
சம்மதத்தை வேண்டி மீண்டே
ஆர்ப்புலவாச் சென்னைநகர் அடைந்தேனேல்
பெருங்குகையில் அமர்ந்த செங்கட்
போர்ப்புலியைப் பார்த்துவரப் போனகதை
யாய்முடியும் பொருளாய் என்னைச்
சேர்ப்புடைய குருமணியே என்செய்கேன்
அறிவறியாச் சிறிய னேனே.
42
48 கண்பார்என் றயர்ந்துபணிந் தழுதிருகண்
ணீர்சொரியக் கலங்கி னானை
நண்பார்மெய்க் குருநாதன் நோக்கிஇவண்
இருந்திடநீ நயப்பாய் அப்பா
பண்பார்இங் குறுமவர்தாம் பிச்சைச்சோ
றுச்சியிலே பரிந்து வாங்கி
உண்பார்மற் றவ்வகைநீ உண்ணுதியோ
உண்ணுதியேல் உறைதி என்றான்.
43
49 உச்சியிலே பிச்சைஎடுத் துண்பதுவோ
பெரிதெளியேற் கோவா தோடிக்
கச்சியிலே பிச்சைகொண்டு காசியிலே
நீராடிக் கடிது போகிக்
கொச்சியிலே செபமுடித்துக் கொங்கணத்தி
லேபுசித்துக் கொள்ளென் றாலும்
மெச்சிஉளே மிகமகிழ்ந்து செய்வேன்என்
றனைஐயா விட்டி டேலே.
44
50 புல்லமுதே நல்லமுது புரைக்குடிலே
புனைமாடம் புடைக்கும் பாறைக்
கல்லணையே மெல்லணைநாள் கழிந்தபழங்
கந்தையே கலைஎன் றாலும்
அல்லலுறேன் அரசேநின் சொல்லமுதுண்
டருந்தவமா டத்தே வைகி
ஒல்லுமனோ திடஅணைகொண் டருட்போர்வை
போர்த்துநலம் உடுக்கின் மாதோ.
45
51 சைவநீ றணிவிளங்கி நகைதுளும்பி
உபசாந்தம் ததும்பிப் பொங்கித்
தெய்வநீ டருட்கருணை நிறைந்துவழிந்
தழகொழுகிச் செம்பொற் கஞ்சப்
பொய்கைவாய் மலர்ந்தசெழும் போதனைய
நின்முகத்தின் பொலிவு நோக்கும்
செய்கையேன் உலகுறுபுன் சுகம்பொசித்தல்
மிகையன்றோ தேவ தேவே.
46
52 எவ்வகைநின் திருவுளப்பாங் கிருப்பதெளி
யேன்அளவில் எந்தாய் எந்தாய்
அவ்வகைநின் றிடச்சிறிதும் அஞ்சேன்என்
றன்னைவிடேல் ஆள்க என்றே
இவ்வகையில் பலபகர்ந்து விழுந்திறைஞ்சி
எழுந்திரா திருகண் ணீரால்
செவ்வகையில் குருநாதன் திருவடிக்கீழ்
நிறையாறு செய்தான் மன்னோ.
47
53 தெருளுறும்அவ் வாச்சிரமத் திருந்துதுற
வறம்காக்கும் செல்வர் எல்லாம்
அருளுறுமெய்ச் சிவகுருவின் அடிவணங்கிச்
சிறியோமை அடர்ந்த பாச
மருளுறுவன் கடல்கடத்தி வாழ்வித்த
குணக்கலமே மணியே இந்த
இருளுறும்ஓர்(416) சிறுவனையும் காத்தருள
வேண்டுமென இரந்தார் ஐயன்.
48
(416). இருளுறும் ஒண் - பொ. சு., பி. இரா., ச. மு. க.
54 மற்றவனை எழுகஎனக் கருணைபுரிந்
தமலமுகம் மலர்ந்து நோக்கிப்
புற்றவரம் அரைக்கசைத்த ஒற்றிநகர்ப்
பெருமானைப் போது மூன்றும்
நற்றகைஅன் புடன்தரிசித் தவன்கோயிற்
பணியாற்றி(417) நாளும் நம்பால்
கற்றவர்தம் சொல்வழியிற் கலைபயின்று
நெறிநிற்கக் கடவாய் என்று.
49
(417). பணி இயற்றி - பொ. சு., பி. இரா., ச. மு. க.
55 தனிமலர்வாய் மலர்ந்தருளிப் பின்னர்அவண்
மாணாக்கர் தம்மை நோக்கிப்
புனிதநெறி யீர்இவனைப் புதியன்எனக்
கருதாமல் புரிந்து நாளும்
கனிவுறஈண் டிவன்அகத்தில் கல்லாமை
எனும்இருளைக் கடியும் வண்ணம்
இனியகலை விளக்கிடுவீர் என்றான்சஞ்
சலன்அதுகேட் டின்பம் எய்தா.
50
56 அடியனேன் உய்ந்தனன்நின் அருள்நோக்கம்
பெறற்கேது வாய தூய
நெடியமா தவம்எதுசெய் திருந்தேன்என்
றகம்குளிர்ந்து நெஞ்சந் தேறி
முடியினால் பன்முறைதாழ்ந் துடம்பொடுக்கித்
தூசொடுக்கி முறையால் பேசும்
படியின்வாய்ப் பொத்திஎதிர் நின்றான்பின்
குருநாதன் பணித்த வாறே.
51
57 வேதமுதல் கலைஅனைத்தும் விதிப்படிகற்
றுணர்ந்தறிவால் மேலோர் ஆகிப்
போதமனச் செறிவுடைய மாணாக்கர்
சஞ்சலனைப் புரிந்து நோக்கி
மூதறிவன் தேசிகன்தன் திருவாக்கின்
படிஇன்று முதல்ஓர் கன்னற்(418)
போதுகலை பயின்றுமற்றைப் போதெலாம்
சிவபணியே புரிதி என்றார்.
52
58 என்றஅருட் சிதம்பரமா முனிவர்அவன்
தனையருகே இருத்தி அன்பால்
ஒன்றியவெண் ணீறணிந்து தூலஎழுத்
தைந்துணர்த்தி உடையான் கோயில்
சென்றுதொழும் நெறியனைத்தும் விளக்கிஅருட்
சிவபணியும் தேற்றி உள்ள
மன்றஅவன் பருவமறிந் ததற்கியைந்த
கலைபயிற்றி மகிழ்வித் தாரால்.
53
குருதரிசனப் படலம் முற்றிற்று.


2. முயற்சிப் படலம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
59 அவ்வண்ணம் சஞ்சலன்தான் புரிந்தியற்றும்
முயற்சியெலாம் அளவிட் டோ தச்
செவ்வண்ணம் பழுத்தஒற்றிச் சிவக்கொழுந்தின்
திருவருளைச் சேர்ந்தோர்க் கன்றி
இவ்வண்ணம் எனப்பகர்தல் பிறர்க்கரிதே
ஆயினும்அவ் விறைவன் தாளை
வெவ்வண்ணச் சிறியேன்உள் ளமர்த்திஒரு
சிறிதறிய விளம்பு வேனால்.
1
60 மேலையிலே படுத்திருந்த வெஞ்சுடரோன்
குணபாலின் விழித்துப் பூவோர்
வேலையிலே முயலுறக்கீழ் வேலையிலே
எழுவதற்கு மேவு மாதி
காலையிலே எழுந்தேகிக் கங்கையிலே
மிக்கதெனக் கருதி மேலோர்
ஓலையிலே பொறித்தநந்தி ஓடையிலே
தெய்வநன்னீர் ஓடி ஆடி.
2
61 வெண்ணிலவு ததும்புதிரு வெண்ணீறைந்
தெழுத்தோதி மிகவும் பூசி
உண்ணிலவு சிவகுருவின் அடித்துணையும்
திருவொற்றி உவந்து மேவும்
கண்ணிலவு நுதற்கரும்பின் கழற்பதமும்
அன்பினொடு கருதிச் சென்றே
எண்ணிலவு குருபரன்தன் திருமுன்அடைந்
தஞ்சலிசெய் திறைஞ்சி மன்னோ.
3
62 முன்னறியான் பின்னறியான் முழுமூடன்
என்றென்னை முனியா தாண்ட
நின்னருளை என்னெனயான் நிகழ்த்துறுவேன்
பெருங்கருணை நிறைவே தூய
நன்னெறியே நடக்கஅருட் போதமெனும்
செங்கோலை நடத்தா நின்ற
மன்னவனே சிவகுருவாம் வள்ளலே
நின்துணைப்பொன் மலர்த்தாள் போற்றி.
4
63 அருந்தவரும் உணவின்இயல் எதுவென்றால்
இதுஎனவும் அறிய நீநின்
றிருந்ததிசை எதுவென்றால் இதுஎனச்சுட்
டவும்தெரியா திருந்த என்னைத்
திருந்தஅருட் கடைநோக்கஞ் செய்தளித்த
பெருங்கருணைச் செல்வ மேநன்
மருந்தமுதம் அனையஅருட் சிவகுருவே
போற்றிஎன வழுத்திப் பின்னர்.
5
64 ஆங்குவிடை கொண்டுகுரு அருள்நோக்கால்
சிவயோக மாதி நண்ணி
ஓங்குதிருக் கூட்டத்தைத் தனித்தனிநின்
றிறைஞ்சிஎனை உவக்கும் வண்ணம்
தீங்ககற்றும் சிவகுருவின் திருவுளத்தை
நாயேன்மேல் திருப்பி இன்பம்
வாங்கிஎனக் களித்தஅருண் மாதவரே
நும்முடைய மலர்த்தாள் போற்றி.
6
65 குருவெல்லை கடவாத குணக்குன்றம்
அனையீரே கோதில் வாய்மை
மருவெல்லை நெறிநின்ற மனத்தீரே
போற்றிஎன வழுத்திப் பின்னர்ப்
பொருவெல்லை அகன்றோங்கும் அன்பினொடும்
அவண்நின்று போந்தவ் வொற்றித்
திருவெல்லை தனைமகிழ்வில் கருவெல்லை
கடக்கவலம் செய்து மாதோ.
7
66 தொழுந்தகைய முனிவரரும் சுரரும்மிகத்
தொழுதேத்தத் துலங்கும் திங்கட்
கொழுந்தசையச் சடைஅசையக் கூத்தாடிக்
கொண்டேஎம் கோமான் நாளும்
எழுந்தருளும் பெருஞ்செல்வத் திருமாட
வீதிதனை இறைஞ்சி ஏத்தி
அழுந்தியசற் பத்தியுடன் மூன்றுமுறை
வலஞ்செய்தங் கதற்குப் பின்னர்.
8
67 உளந்தெளிந்து விளங்குகின்ற உத்தமர்செய்
தவமேபோல் ஓங்கி வானம்
அளந்ததிருக் கோபுரம்கண் டஞ்சலிசெய்
திறைஞ்சிமுகி லாதி சூடி
இளங்கதிர்வெண் திங்கள்அணி எம்பெருமான்
சடைமுடிமேல் இலங்கும் தூய
வளங்கெழுமோர் திருமதிலை ஐந்துமுறை
வலமாக வந்து மாதோ.
9
68 உட்புகுந்து திருவாயல் இடைஓங்கும்
விடைக்கொடியை உவந்து நோக்கிக்
கட்புனலில் குளித்திரண்டு கைகுளிரத்
தொழுதிறைஞ்சிக் கருணை செய்யும்
ஒட்புடைய நம்பெருமான் மாளிகையை
வலம்ஏழின் உவந்து செய்து
நட்புடைய மனங்கசிய ஐந்தெழுத்துள்
நினைந்துமெல்ல நடந்து மாதோ.
10
69 அம்பொடித்துப் பகைதுரக்கும் கயமுகனைக்
கருணையினால் ஆளும் வண்ணம்
கொம்பொடித்து வீசிஅவன் கோளொடித்துக்
கோலொடித்துக் கோதில் விண்ணோர்
வம்பொடித்து வாழ்வித்த ஆனைமுகப்
பெருமானை வணங்கித் தன்தே
கம்பொடித்துக் கைகுவித்துக் கருத்துருகிக்
கண்களில்நீர் காண நின்றே.
11
70 தடைஉடைக்கும் தனிமுதலே தண்ணமுதே
எங்கள்பெருந் தகையே ஓங்கி
மடைஉடைக்கும் பெருங்கருணை மதமலையே
ஆனந்த மலையே உள்ளத்
திடைஉடைக்கும் துயர்நீக்கி இன்பளிக்கும்
ஐந்துகரத் திறையே மாயைக்
கடைஉடைக்கும் கழற்புனைதாட் கணபதியே
போற்றிஎனக் கனிந்து மன்னோ.
12
71 திறம்பழுத்த அருணந்தி தேவர்அடி
வணங்கிஅருட் சிவத்தின் செய்ய
நிறம்பழுத்த மலரடியை மால்முதலோர்
அழுக்காறு நிரம்ப மேற்கொண்
டறம்பழுத்த விடைஉருவத் தண்ணலே
எனப்பரவி அனுக்ஞை பெற்று
மறம்பழுத்தார்க் கரியதிரு விமானத்தை
அனந்தமுறை வலஞ்செய் தேத்தி.
13
72 வன்னிதியை மருவாத மாதவரும்
மால்அயனும் வணங்கிப் போற்றும்
சந்நிதியைச் சார்ந்துவிழி யானந்த
நீர்வெள்ளந் ததும்பப் பல்கால்
நன்னிதிபெற் றிடப்பணிந்து கரங்குவித்துப்
படம்பக்க நாதன் என்னும்
செந்நிதியிற் பரஞ்சுடரைப் பொன்னிதிகண்
டவன்போல்கண் செழிக்கக் கண்டு.
14
73 உடல்முழுதும் புளகம்எழ உளமுழுதும்
உருக்கம்எழ உவந்தா னந்தக்
கடல்முழுதும் கண்கள்எழக் கரசரணங்
கம்பமெழக் கருத்தி னோடு
மடல்முழுதும் எழமலர்ந்த மலரின்முக
மகிழ்ச்சிஎழ மலிந்த பாசத்
திடல்முழுதும் அகன்றன்பே வடிவாக
நின்றுதுதி செய்வான் மாதோ.
15
74 உடையானே எவ்வுயிர்க்கும் ஒருமுதலே
இளம்பிறைகொண் டோ ங்கும் கங்கைச்
சடையானே அன்பருளத் தாமரையில்
அமர்ந்தபெருந் தகையே வெள்ளை
விடையானே மறைமுடிபின் விளங்கியமெய்ப்
பொருளேமெய் விளங்கார் தம்மை
அடையானே திருவொற்றி ஆலயத்தெம்
அரசேநின் னடிகள் போற்றி.
16
75 கலைமகளும் திருமகளும் கழுத்தணிந்த
மங்கலநாண் கழற்றா வண்ணம்
அலைகடலின் எழுவிடத்தை அடக்கியருள்
மணிமிடற்றெம் அமுதே தெய்வ
மலைமகளை ஒருபுறம்வைத் தலைமகளை
முடியிட்ட மணியே மேருச்
சிலைவளைத்துப் புரம்எரித்த சிறுநகைஎம்
பெருமான்நின் திருத்தாள் போற்றி.
17
76 மறைதேட அயன்தேட மால்தேட
அன்பர்உள மலரி னுள்ளே
இறையேனும் பிரியாமல் இருந்தருளும்
பெருவாழ்வே இறையே என்றும்
குறையாத குளிர்மதியே கோவாத
ஒளிமணியே குணப்பொற் குன்றே
பொறையாளர் வழுத்தும்ஒற்றிப் பூங்கோயிற்419
பெருமானே போற்றி போற்றி.
18
பூங்கோயில் - ஒற்றியூர்க் கோயிலுக்குப் பூங்கோயில்
என்று பெயர். திருவாரூர்க் கோயிலுக்கும் பெயர்.
77 எனப்பெரிதும் துதித்திறைஞ்சி ஆடுகின்ற
பெருமான்முன் எய்தித் தூக்கும்
வனப்புடைய மலர்ப்பதமும் மாயைதனை
மிதித்தூன்றும் மலர்ப்பொற் றாளும்
மனப்பருவ மலர்மலரக் கண்குளிரக்
கண்டுமிக வணங்கிப் பல்கால்
இனப்பெரியார்க் கின்பருளும் கூத்துடைய
மாமணியே இன்ப வாழ்வே.
19
78 காரணமுக் கண்கொளும்செங் கரும்பேசெங்
கனியேஎன் கண்ணே மேலை
ஆரணத்துட் பொருளாகி அனைத்துமாய்
யாதொன்றும் அல்லா தாகிப்
பூரணசின் மயவெளியில் சச்சிதா
னந்தநடம் புரியுந் தேவே
ஏரணவு நடராயப் பெருமானே(420)
எம்மானே என்று வாழ்த்தி.(421)
20
(420). பெம்மானே - பொ. சு., பி. இரா., ச. மு. க.

(421) அடிகளது தொடக்க காலத் தனிப் பாடல்கள் சிற்சில
கொண்ட ஒரு சுவடியில் ஓர் ஏட்டில் இந்தப்பாட்டு மட்டும்
பின்வருமாறு காணப்படுவதாக ஆ. பா. குறிப்பிடுகிறார்

பூரணசின் மயவெளியிற் சச்சிதா

நந்தநடம் புரியுந் தேவே
காரணமுக் கண்கொளும்செங் கரும்பேஎன்
கண்ணேமெய்க் கடவு ளேநால்
ஆரணமும் கடந்தப்பால் அனைத்துமாய்
யாதொன்றும் அல்லா தாகி
ஏரணவு நடராஜப் பெருமானே
எம்மானே என்று போற்றி.
79 சடையாடச் சடைமீதிற் சலமகளும்
இளமதியும் ததும்பக் கொன்றைத்
தொடையாடக் கருணைவிழிக் கடைதுளும்பப்
புன்னகைஉள் துலங்க வெள்ளைக்
கொடையாட இமயமடக் கொடியாடத்
தனிநெடுவேற் குழந்தை மேவி
இடையாடப் பவனிவரும் எம்பெருமான்
தியாகன்எதிர் இறைஞ்சி நின்று.
21
80 இருந்தேஎன் உளத்திலங்கும் செழுஞ்சுடரே
ஓவாத இன்ப மேயா
வருந்தேறா நிலைநின்ற வான்பொருளே
பவப்பிணியை மாற்றும் தெய்வ
மருந்தேஎன் கண்ணேகண் மணியேசெம்
மணியேஎன் வாழ்வே எங்கள்
பெருந்தேவே தருந்தியாகப் பெருமானே
கடவுளர்தம் பிரானே போற்றி.
22
81 என்றுதுதித் தருள்வடிவிற் கல்லாலின்
அடியமர்ந்த இறைவன் முன்னின்
றொன்றுமனத் தன்புடன்கீழ் விழுந்துபணிந்
தெழுந்திருகை உச்சி கூப்பி
நன்றுணர்ந்த நால்வருக்கன் றருள்மொழிந்த
குருமணியே நாயி னேனை
இன்றுமகிழ்ந் தாட்கொண்ட சிவகுருவே
சற்குருவே என்று வாழ்த்தி.
23
82 மயிலேறும் பெருமான்(422) முன் இறைஞ்சிமலர்க்
கரங்கூப்பி வணங்கி நின்றே
அயிலேறும் கதிர்வேற்கை ஐயாஎன்
அப்பாஎன் அரசே அன்பர்
கையிலேறும் கனியேமுக் கண்ஏறு
பெற்றஇளங் காளாய் நீலக்
குயிலேறு மொழிக்கடவுட் குஞ்சரந்தோய்
களிறேஎன் குருவே போற்றி.
24
(422). மயிலேறும் பெருமாள் - பொ. சு., ச. மு. க.
83 ஓடுகின்ற சிறுவர்களோ டுடன்கூடி
விளையாட்டே உவந்து நாளும்
ஆடுகின்ற பருவத்தே அடியேனுள்
அமர்ந்தருளி அன்பால் நின்னை
நாடுகின்ற வகைசிறிதே அளித்தீண்டு
குருவாகி நலந்தந் துள்கிப்
பாடுகின்ற வகைஅளித்த பரகுருவே
போற்றிஎனப் பரவி மன்னோ.(423)
25
(423). இப்பாடல் பின்வருமாறு சில பாடபேதங்களுடன்
குருட்டாட்டம் எழுதியுள்ள ஏடுகளுள் ஒன்றன் ஒதுக் கிடங்களில்
அடிகளால் எழுதப்பட்டுள்ளதாக ஆ. பா. குறிப்பிட்டுள்ளார்.

ஓடுகின்ற சிறுவர்களோ டுடன்கூடி

விளையாட்டே உவந்து நாளும்
ஆடுகின்ற பருவத்தே அடியேனுள்
எழுந்தருளி அன்பால் நின்னை
நாடுகின்ற வகைசிறிதே அளித்தின்று
குருவாகி நலந்தந் துன்னைப்
பாடுகின்ற பணிஅளித்த பரகுருவே
போற்றி எனப்பரவி மன்னோ.
84 பன்முறைநாத் தழும்பேறத் துதித்துநெடுங்
கடல்முழுதும் பருகிக் கந்நாள்
நன்முறைசெய் மணக்கோலங் காட்டியருள்
பெருமான்முன் நண்ணி நின்று
தொன்முறைமா றாமல்அருள் சுந்தரிசேர்
கல்யாண சுந்த ரர்முன்
சொன்முறைசேர் சுந்தரன்தன் தோழாஎன்
றகங்குளிர்ந்து துதித்து வாழ்த்தி.
26
85 மான்மகனை நான்முகனா வைத்தவன்றன்
சிரநகத்தால் வகிர்ந்து வாங்கித்
தேன்மலர்ப்பொற் கரத்தேந்தும் காபாலி
முன்பணிந்து திருமால் வேதன்
வான்மகனா தியர்தம்மை வருத்தியஅந்
தகன்செருக்கு மாளச் சூலத்
தூன்மலர நுழைத்தேந்தும் வயிரவநிற்
போற்றிஎன உவந்து வாழ்த்தி.
27
86 நிலையாய்நின் றுயர்ந்தவர்கட் கருள்புரியும்
பரம்பரையை நிமலை தன்னைத்
தலையால்மெய் யுறவணங்கி உலகமெலாம்
அளித்தபெருந் தாயே மேருச்
சிலையான்தன் இடத்தமர்ந்த தெள்ளமுதே
ஆனந்தத் தேனே மானே
மலையான்தன் ஒருமகளே வடிவுடைய
இளங்குயிலே மயிலே போற்றி.
28
87 வான்வளர்த்த மலர்க்கொடியே மலைவளர்த்த
மடப்பிடியே மணியே வாசக்
கான்வளர்த்த மலர்க்கோதைக் கனியேமுக்
கனியேபைங் கரும்பே செங்கை
மான்வளர்த்துச் சடையில்இள மதிவளர்த்த
ஒருகிழவன் மகிழ வாய்த்த
தேன்வளர்த்த மொழிக்குமரி கௌரிஎன
மறைபுகழ்மா தேவி போற்றி.
29
88 போற்றிஎனப் புகழ்ந்துசண்பைப் புனிதமறைக்
குலமணியைப் போந்து போற்றி
நாற்றிசையும் புகழ்கின்ற நாவரசைப்
பணிந்துசிவ ஞானந் தேறித்
தோற்றியஓர் சங்கிலியால் துடக்குண்ட
யானைதனைத் தொழுது மாயை
மாற்றியநம் மாணிக்க வாசகப்பொன்
மலையடியை வணங்கி மாதோ.
30
89 தொண்டுநிலை சேர்ந்துயர்ந்த சண்டேசர்(424)
முதலோரைத் தொழுது போற்றி
விண்டுமுதல் நெருங்குதிரு வாயலிடை
அன்பினொடு மேவி ஆங்குத்
தண்டுவிழுந் தெனவிழுந்து பணிந்துபணிந்
திருவிழியில் தரள மாலை
கொண்டுநடங் கொண்டுநெறி கொண்டுமகிழ்
கொண்டுமனங் குளிர்ந்தான் பின்னர்.
31
(424). தண்டேசர் - பொ. சு.
90 கருவலகிட் டருள்புரியும் கண்ணுடையான்
விமானத்தின் கனகச் சூழல்
மருவலகின் மணித்திரள்மா ளிகைமண்ட
பங்கள்முதல் வகுத்த எல்லாம்
திருவலகிட் டணிசாந்தத் திருமெழுக்கிட்
டன்பினொடும் திருவா யற்கண்
ஒருவலகில் திரணமொடு புல்லாதி
களைக்களைந்தாங் குவந்து மாதோ.
32
91 புறத்தணுகித் திருமதிலின் புறத்தினும்நல்
திருக்குளத்தின் புறத்தும் ஞானத்
திறத்தர்மகிழ்ந் தேத்துகின்ற திருமாட
வீதியினும் தெரிந்து காலின்
உறத்தருமுட் கல்லொடுபுல் லாதிகளை
நீக்கிநல முறுத்திப் பாசம்
அறத்தொழுநல் அறத்தொழுகும் சிவனடியர்க்
கேவல்பல அன்பாற் செய்து.
33
92 கருமுடிக்கும் களம்(425) உடையான் கண்ணுடையான்
எம்முடைய கருத்தன் செய்ய
திருமுடிக்கும் செங்கமலத் திருவடிக்கும்
புனைந்திடுவான் சிறப்ப வைத்த
மருமுடிக்கு மலர்நந்த வனத்தினையுள்
அன்புடனே வணங்கித் தூநீர்
உருமுடிக்கட் சுமந்துகொணர்ந் துட்குளிர
விடுத்துவிடுத் தூட்டி மாதோ. td valign=bottom>34
(425). கனம் - ச. மு. க.
93 தேங்கமழ்பொற் கொன்றைநறும் பாடலம்மா
லதிவகுளம் சிறந்த சாதிக்
கோங்குவழை மயிலைநறு மல்லிகைஒண்
தளவமலர்க் குரவம் தும்பைப்
பாங்கறுகு கூவிளநற் பத்திரமா
தியமிகுசற் பத்தி உள்ளத்
தோங்குறமெய்ப் புனிதமொடும் உவந்துபறித்
தைந்தெழுத்தும் உன்னி ஆங்கே.
35
94 பொன்மாலை யனையகொன்றைப் பூமாலை
முதற்பிணையல் புனித மாலை
என்மாலை யகற்றுடையான் திருமுடிக்குச்
சாத்துதிரு இண்டை மாலை
கன்மாலை நெஞ்சமுறான் கழல்மாலை
தோள்மாலை கன்னி மாலை
மன்மாலை தார்மாலை வகைமாலை
தொடுத்தெடுத்து வந்து மாதோ.
36
95 மீண்டுமருட் கோயிலினுட் புகுந்துச்சிப்
பூசனைசெய் வேலை தன்னில்
ஆண்டவனுக் கணிவித்து வலம்புரிந்து
தொழுதுதுதித் தாடிப் பாடி
ஆண்டமரும் பரிவாரத் தேவர்முதல்
அனைவரையும் அன்பால் ஏத்தி
வேண்டுவிருப் புடன்பிரியா விடைகொண்டு
புறத்தணுகி மேவி ஆங்கண்.
37
96 சீரேனம் அறியாத திருவடியும்
குருவடியும் சிந்தித் தேகி
யாரேனும் கொலைகுறியார் எமக்குரியார்
எனஅவர்தம் இல்லந் தோறும்
போரேர்நெற் சோறேனும் புதுக்கஞ்சி
யேனும்அன்றிப் புளித்த காடி
நீரேனும் கூழேனும் கிடைத்ததுகை
யேற்றுவந்து நின்று வாங்கி.
38
97 அங்குருவின் தகைதெரிக்கும் ஆச்சிரமத்
திடைஅணுகி அன்பி னோடும்
தங்குருவின் அடிமுடிமண் ணுறவணங்கி
இருகரமும் தலைமேற் கூப்பி
எங்குருவே சிவகுருவே எழிற்குமர
குருவேஇவ் வெளியேன் தன்பால்
இங்குருவிற் கருணைபுரி திருவாக்கின்
படிபிச்சை ஏற்ற தீதால்.
39
98 எனத்தொழுது நின்றானைக் கருணையொடும்
கடைக்கணித்தே இறைவன் கோயிற்
கனத்தபணி புரிந்தனைநின் இளைத்தஉடல்
ஆங்கதனைக் காட்டு கின்ற
தினத்தவரோ டுண்ணுதிபின் பெய்துதிஈண்
டெனஉரைப்ப இறைஞ்சி வாழ்த்திச்
சினத்தழல்நீத் தருள்மிகுத்த திருக்கூட்டந்
தனைவணங்கிச் சிந்தித் தேத்தி.
40
99 அக்கூட்டந் தனில்உண்ணா அருந்தவரை
வினவிஅவ ரடியில் தாழ்ந்து
மிக்கூட்டும் அன்னையினும் மிகப்பரிவின்
அவர்க்கூட்டி மிகுந்த சேடங்
கைக்கூட்டக் காணாதே ஆயினும்மற்
றதுகுருவின் கழல்கள் ஏத்தி
மெய்க்கூட்டம் விழைந்தவன்றான் மிகமகிழ்ச்சி
யுடன்உண்டு விரைந்து மாதோ.
41
100 வாய்பூசிக் கைபூசி வந்துசிவ
குருவின்அடி வணங்கி நின்றான்
தாய்பூசித் தெதிர்நிற்கும் தனையனைப்பார்த்
துரைப்பதுபோல் தயவால் நோக்கிப்
பேய்பூசித் திடும்சிறிய பேதையர்போல்
அல்லாது பெரிது மிக்கன்
பாய்பூசித் திறைவனடி வணங்குகின்ற
நல்லோரைப் பணிந்து வாழ்த்தி.
42
101 அன்பிரக்கம் அறிவூக்கம் செறிவுமுதல்
குணங்கள்உற அமைந்து நாளும்
இன்புறக்கண் ணுதலான்தன் திருக்கோயில்
பணிபுரிந்தீண் டிருக்கும் நல்லோர்
துன்பறச்சொல் வழிஎந்த வழிஅந்த
வழிநடந்து துகளில் கல்வி
பொன்புரக்கும் தொழில்வணிகர் போல்பயில்க
எனக்குரவன் புகன்றான் மன்னோ.
43
102 அம்மொழியாஞ் செம்மணியை அடிமுடியின்
அணிந்துமன மலர்ந்து நாயேன்
இம்மொழிஆ ரமுதருந்த என்னஅருந்
தவமுன்னர் இயற்றி னேனோ
செம்மொழிஆ ரணம்பரவும் சிவகுருவே
எனத்துதித்துச் சினங்கொண் டோ தும்
வெம்மொழிஒன் றில்லாத திருக்கூட்டத்
தவர்களொடும் மேவி னானால்.
44
கலிவிருத்தம்
103 கொற்றவர் புகழும்அக் கூட்டந் தன்னில்வாழ்
முற்றவர் சிதம்பர முனிவர் தம்முனர்
உற்றிடும் சஞ்சலன் உளத்தை ஓர்ந்தவன்
கற்றிடற் கேற்றநற் கலைகள் தேற்றவே.
45
104 உளங்கொண்டங் கவன்தனை உழையி ருத்திஓர்
வளங்கெழு கன்னலின் மட்டும் இன்சுவை
அளந்தறிந் தூட்டுநல் அன்னை போல்மனக்
களங்கறப் பருவநேர் கலைப யிற்றிட.
46
105 பயின்றனன் சஞ்சலன் பரிந்து தெள்ளமு
தயின்றனன் ஆமென அகங் களித்தனன்
வியந்தனன் ஆங்கவர் விடுக்க மீண்டுநல்
வயந்தரு கோயிலின் மருங்கு நண்ணினான்.
47
106 அன்புடன் புனிதநீ ராடி நீறணிந்
தின்புடன் கண்டிகை எடுத்துப் பூண்டுதன்
துன்பறக் குருபதந் துதித்துக் கோபுரம்
முன்புறப் பணிந்துமா முகனைப் போற்றியே.
48
107 அந்தியார் வண்ணனை அந்திப் பூசனை
சந்தியா நின்றஅச் சமயத் தெய்தியுட்
புந்தியால் நினைந்துடல் புளகம் போர்த்திட
வந்தியா நின்றடி வணங்கி ஏத்தியே.
49
108 பாங்கமர் சிவபரம் பரையை வாழ்த்திக்கை
ஓங்கயிற் பிள்ளையை உவந்து போற்றிநின்
றாங்கமர் மற்றுள அமல மூர்த்திகள்
பூங்கழல் வணங்கிஓர் புறத்தி ருந்தரோ.
50
109 வருநெறி மூலமாம் மந்தி ரத்தினை
மருவிய அக்கமா மணிவ டங்கொடு
இருமைகொள் ஆயிரத் தெட்டின் எல்லையாம்
உருவுறச் செபமுடித் துளத்தின் உன்னியே.
51
110 எழுந்துவீழ்ந் திறைஞ்சிநின் றேத்தி அன்பினில்
அழுந்துநெஞ் சகத்தொடு அமல மாம்சிவக்
கொழுந்தமர் தளிவலங் கொண்டு கண்ணடி
உழுந்துருள் அளவும்வே றுன்னல் இன்றியே.
52
111 மாலயற் கரியநம் வள்ள லார்வளர்
ஆலயத் திரவிடை ஆற்றத் தக்கன
ஏலநெய்த் திருவிளக் கேறப் பார்த்திடும்
மூலமெய்த் திருப்பணி முதல ஆற்றியே.
53
112 விடைகொடு புறத்துறீஇ விமலன்அன்பர்கட்
கடைவுறப் பணிகள்செய் தகங்கு ளிர்ந்துவான்
தடைபொழில் ஆச்சிர மத்திற் சார்ந்தவண்
இடைமகிழ் குருவடி இறைஞ்சி ஏத்தியே.
54
113 எண்ணுறு தவர்அடிக் கேவல் ஆற்றியும்
கண்ணுறு பாடம்உட் கருதி யும்அவை
நண்ணுறக் கேட்டும்சொல் நயங்கள் நாடியும்
பண்ணுறு பொருள்நலம் பாங்கின் ஓர்ந்துமே.
55
114 காமமும் வெகுளியும் கடுஞ்சொல் ஆதிய
நாமமும் கனவினும் நண்ணல் இன்றியே
சேமமும் ஒழுக்கமும் செறிவும் ஆதிய
தாமமும் மணியும்போல் தாங்கி ஓங்கியும்.
56
115 கண்வளர்ந் திடுதல்ஐங் கடிகை(426) மற்றைய
திண்வளர் பொழுதெலாம் தேசி கப்பிரான்
பண்வளர் திருவடிப் பணியும் எம்பிரான்
ஒண்வளர் பணிகளும் உஞற்றி வைகினான்.
57
(426). கடிகை - நாழிகை
116 மாசறு தவர்கள்உள் மகிழ்ந்து நோக்கவும்
தேசிகன் திருவுளம் திரும்பித் தேக்கவும்
ஆசறு கலைபயின் றமர்ந்து ளான்இவன்(427)
ஏசற இவ்வணம் இயற்று நாளினே.
25
(427). இவண் - பி. இரா., ச. மு. க.
முயற்சிப்படலம் முற்றிற்று


2. குருட்டாட்டம் (428)


(428. இதன் விளக்கம் பாடல்களின் இறுதியில்)

2.1 குருட்டு மாணாக்கர் புல்லொழுக்கம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காப்பு
1 திங்களணி சடைமவுலிச் சிவனேஇக்
கலிமகிமைத் திறத்தில் இங்கே
எங்கள்உல கியலின்உறு பிரமசரி
யத்தின்நெறி என்சொல் கேனோ
தங்கள்உப நயனவிதிச் சடங்குசெயும்
பருவமிது தானே என்றால்
உங்களுக்கிங் கெதுதெரியும் ஒன்பதுதொட்
டைம்பதுமட் டுண்டென் பாரே.
1
2 இவ்வகைஇங் காபாச உபநயன
மல்லாமல் எள்ளிற் பாதிச்
செவ்வகையும் பருவமதில் இச்சடங்கின்
விதிஒன்றும் செய்யக் காணேன்
உவ்வகையோர் நரைத்தலைக்கு விளக்கெண்ணெய்
கிடைத்தபரி சொத்து மேவும்
அவ்வகையோர் தமைச்சிவனே எவ்வகையோர்
எனக்கலியின் அறைவ தன்றே.
2
3 பெருஞ்சவுசம் செய்தல்எனும் சங்கடத்துக்
கென்செய்வோம் பேய்போல் பல்கால்
வருங்குளநீர் கொண்டலம்பல் அமையாதே
மண்ணெடுத்து வருந்தித் தேய்த்து
இருங்கரம்ஆ சனந்தேய்ந்தோம் என்பர்சில
மாணிகள்ஈ தென்னே என்னே
கருங்களமா மணியேஇக் கலிகால
மகிமை என்னால் கழறற் பாற்றோ.
3
4 (இந்தஜபம் அடி)க்கடிஇங் காராலே
செயமுடியும் அந்தோ நீரில்
(வந்துயிர்க்கும் உயி)ர்களுக்கும் சலிப்பாமே
முப்பொழுதும் மலிநீ ராட
(நிந்தைஎன்ப தெ)ங்கேநாம் இங்கேவந்
தகப்பட்டோ ம் நிலையல் தம்மோர்
(இந்திரவில் லா)ய்ச்சொல்வம் என்பர்சில
மாணிகள்மா தேவ என்னே.
4
5 சந்தியா வந்தனையாம் ஏழரைநாட்
சனியொன்றும் தானே போதும்
சிந்தியாப் பெருஞ்சுமைவெந் தீயினிடைச்
சமிதைகொடு செய்யுஞ் செய்கை
புந்தியால் நினைக்கில்உளந் திடுக்கிடுவ
தென்பர்சிலர் போத மிக்கோர்
வந்தியார் பிட்டருந்து மாமணியே
கலிகால மகிமை ஈதே.
5
6 (கா)கம்போல் (நான்கு)மறை யெ(ன்)னும்பே
ரவதியைநாம் கதறும் வெப்பம்
(மேகம்போல்) நெய்குடித்தும் போகாதே
என்செய்வோம் ஓவா தொத்(த)
(தேகமெலாம்) நோகின்ற தெம்மாலே
முடியாதீ தென்பார் சில்லோர்
(மோகமிலா) தளித்தநுதற் கண்கரும்பே
கலிகால முறைமை நன்றே.
6
7 முத்தனைய நகைமாதர் இன்பமிலை
முடிக்குமலர் முடித்தல் இல்லை
இத்தனையும் அழகுசெய்யும் தாம்பூல
தாரணமும் இல்லை அந்தோ
எத்தனைநாள் இவையெல்லாம் இல்லாமல்
இருப்பதுநாம் என்பார் சில்லோர்
சித்தனையர் உளமமர்ந்த சிவக்கொழுந்தே
இதுகலியின் சீர்மை தானே.
7
8 (முருக்கும்)நா ணரைஎங்கே பொன்னரைநாண்
வேண்டிஇவண் முயல்கின் றார்க்கு
(இருக்கன்)மான் தோலுடுக்கை எங்கேபொற்
சரிகையுடை ஏற்கின் றார்க்கு
(வி)ருக்கங்கோ லென்படு நெடும்பொற்
சித்திரக்கோல் விழைகின் றோர்பால்
(கருக்க)ணிகண் டத்தோய்இக் கலிகால
மாணிகள்சீர் நவிலற் பாற்றோ.
8
9 (இந்தமட்டு)ம் போதும்இனி இல்லொழுக்கம்
சொல்லுமென இசைக்கின் றோரும்
(வந்தமட்டு)ம் சொல்வமன்றி வாராது
நிறுத்துமென வகுக்கின் றோரும்
(எந்தமட்டும் நு)ழைந்ததென்றால் வால்மட்டும்
நுழைந்ததென இசைக்கின் றோரும்
(சிந்தைமட்டா)ம் சிவக்கொழுந்தே இக்கலியின்
உண்டுசில சீடர்க் குள்ளே.
9
10 இல்லறத்தார் ஆகஎமக் கிச்சைஉமக்
கிச்சைஎன்ன என்கின் றோரும்
சொல்லறத்தில் நிற்கஇனி முடியாது
விடுகஎனச் சொல்கின் றோரும்
நல்லறத்தில் நல்லறமொன் றெமக்குரையும்
சுளுவில்என நவில்கின் றோரும்
செல்லறத்திற் சிவக்கொழுந்தே இக்கலியின்
உண்டுசில சீடர்க் குள்ளே.
10
11 (குருவின்சொ)ல் வழிநின்று பணிபுரிவ
தெங்கேஅக் குருவா னோன்தான்
(மருவினிய நற்செ)஡ல்மொழிந் திடினும்வளை
யாதபனை மரம்போல் நிற்பார்
(கருவின்கண்) ணேஇவர்தாம் கற்றுமுடிந்
திட்டார்சொல் கபடம் பேசி
(உருவதனின்) மிகச்சிறியர் போற்பழிப்பர்
தெழிப்பர்நகைத் துலவு வாரே.
11
12 சீர்க்குருவுக் குபசாரம் செய்வதெங்கே
சிவனேஉட் சிரிப்புத் தோன்ற
வேர்க்குருவோ முகக்குருவோ நம்குருவென்
றேளனமே விரிப்பார் அன்றிப்
பார்க்குரிய மறையோது கின்றோர்போல்
மெணமெணப் பழிச்சொல் ஓதி
ஊர்க்குருவி போல்கிளைப்பர் மாணிகள்இக்
கலிகாலத் துவப்பாம் அன்றே.
12
13 (அற்பமதும்) சுதந்தரந்தான் இல்லாமல்
இக்குருவுக் கடங்கி முன்னே
(நிற்பதுவும் இவ) ன்பின்னே நடப்பதுவும்
இவன்குறிப்பில் நின்று வேதம்
(கற்பதுவும் போ) லாம்இக் கட்டையெலாம்
விட்டுமெள்ளக் கடப்போம் என்பார்
(பொற்பொதுவில்) நடமியற்றும் புனிதாஇம்
மாணிகள்தம் புதுமை என்னே.
13
14 எவ்வாறிப் பிரமசரி யாம்சனியை
இழப்போம்என் றிரங்கி நிற்பார்
இவ்வாறு நிகழ்கின்ற மாணிசிலர்
நல்லோர்காண் இவ்வா றன்றி
ஒவ்வாத கொடுஞ்சொல்லால் குருவைஎதிர்க்
கின்றோரும் உண்டே பல்லோர்
செவ்வாம்பல் கனிவாய்மா தேவிஒரு
புடையாய்இத் திறந்தான் என்னே.
14

2.2. குருட்டு ஆசிரியர் புல்லொழுக்கம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
15 (பொய்யதனை உ)ரைப்பர்கள்இப் பிரமசா
ரிகள்நெறிதான் புதிதே முக்கண்
(ஐயனே இவ)ர்மீதிற் குறையொன்றும்
இலைஇவர்கட் கறிவு சாற்றிச்
(செய்யுமா) சிரியர்செய லுரைக்கில்பிண
மும்நின்று சிரிக்குமிகச் சிறியர்நின்று
(வையுமவர்) சீடரவர்க் கெழுகோடி
மடங்கதிகம் என்ன லாமே.
1
16 எய்கின்றான் குருஅம்பால் எறிகின்றான்
சீடன்கல் லெடுத்து வஞ்சம்
செய்கின்றான் குருஇடித்துச் சிரிக்கின்றான்
சீடன்மிகத் தீய சொல்லால்
வைகின்றான் குருஅவனை வலிக்கின்றான்
சீடன்நடு வழியில் நின்று
பெய்கின்றான் குருஓடிப் பெய்கின்றான்
சீடன்என்னோ பிறைவேய்ந் தோனே.
2
17 (வன்பிடுவார்) குருஅவர்பால் வழக்கிடுவார்
சீடர்அயல் மனையை வேண்டித்
(துன்படைவார் கு)ருத்தாம்போய்ச் சுகித்திடுவார்
சீடர்பின் சுளித்துக் கையால்
(முன்படுவார்) குருஅவரை மொத்திடுவார்
சீடர்இந்த முறைமை யன்றோ
(உன்புடையார் க)லிமகிமை கண்டாய்முக்
கண்ணுடன்என் னுளங்கொண் டோ யே.
3
18 இருந்துறங்கும் ஆசிரியர் இயல்கண்டே
படுத்துறங்கி யிடுவார் சீடர்
கருத்தடங்கண் பெண்முலைமேற் கண்வைப்பர்
ஆசிரியர் கண்டு சீடர்
இருந்தடங்கை வைத்திடுவார் ஆசிரியர்
சித்திரம்பே சிடுவார் கேட்டுள்
வருந்திவிளை யாடிடுவார் சீடர்கள்முக்
கண்ணுடன்என் னுளங்கொண் டோ யே.
4
19 (சூதினையே ஦)காண்டுமறை சொல்லுவிப்பர்
ஆசிரியர் சூழ்ந்தா ரோடு
(வாதினையே) கொண்டதனை வாசிப்பார்
மாணாக்கர் வஞ்சங் கொண்டு
(காதினையே கெ)஡ண்டமணிக் கடுக்கனிட்ட
முகமன்றிக் கருணை யன்பு(ப்
போதினையே கெ)஡ண்டமுக மிலைஇவர்பால்
கலியன்றே விடையூர்ந் தோயே.
5

(428). இப் பத்தொன்பது பாடல்களும் அடிகளது தொடக்க காலத்திய பாடல்கள் கொண்ட ஒரு சுவடியில் அடிகளால் எழுதப்பட்டுள்ள தென்றும், எண் குறிப்பும் தலைப்பும் இல்லை என்றும், அடைப்புக் குறிக்குள் உள்ளவை ஏடுகள் சிதைந்துள்ள இடங்களில் ஒருவாறு 'காமா, சோமா' என்ற வகையில் தாம் அமைந்தவை என்றும் ஆ. பா. அடிக்குறிப்பெழுதுகிறார். குருட்டாட்டம் என்ற பெயரும் உள் தலைப்புகளும் ஆ. பா. அமைத்தவையே.

குருட்டாட்டம் முற்றிற்று


3. குடும்ப கோரம் (429)


(429. இதன் விளக்கம் பாடல்களின் இறுதியில்)

நிலைமண்டில ஆசிரியப்பா
1 திருவளர் கமலக் குருமலர் தவிசினன்
முதற்பெருந் தேவர் மூவரும் பணியப்
பொதுவிடைத் திருநடம் புரியுநம் பெருமான்
அடிமலர்க் கன்புசெய் அன்பர்கட் கன்பன்
சீர்விளை தூய்மை நீர்விளை யாடிச் சொற்றரு வாய்மைப் பொற்றுகில் உடுத்துக்
கரிசில்வெண் ணீற்றுக் கவசந் தரித்துத்
தத்துவ சிற்பர சற்குண அகண்ட
அற்புத சிற்குண அங்கலிங் கேசனை
10
அகத்தும் புறத்தும் அருச்சனை புரிந்து
சிவந்தரு சுகமெனும் திருவமு துண்டு
சீலம் எனும்தாம் பூலந் தரித்தே
அளவில் இன்பம் அனுபவிக் கின்றவன்
மூதறி வாளன் முத்து சாமிஎன் றியற்பெய ருடையஇத் திருவா ளனுக்கு
இராம லிங்கம் எழுதி விடுத்த
மயலுறு சோபன வாசகம் ஆவது
ஐயநின் புடைஇப் பொய்யனேன் போதர
தடைபல உளஅவை சாற்றிட என்றால்
20
ஆயிரங் கோடிநா வாயினும் முடியா
இருந்து மற்றவை எண்ணிட என்றால்
உள்ளம் உடம்பெலாம் கொள்ளினும் போதா
எழுதஎன் றாலும் ஏட்டுக் கடங்கா
என்னினும் சிறிதே எழுதத் துணிந்தனன் (குடும்பத் தலைவன்)

என்னெனில் யான்ஓர் ஏழை என்பதும்
தெளிவிலாச் சிறியரில் சிறியனேன் என்பதும்

(முதல் மனைவி)

இன்புடை அறிவே இல்லை என்பதும்
அன்புடை யாய்நீ அறியாத தன்றே
செம்பொடு களிம்பு செறிந்தது போன்றோர்
30
ஆணவக் கிழத்தி அநாதியில் இறுகப்
பிரமரா க்ஷசிபோற் பிடித்துக் கொண்டனள்
சிவபூ ரணத்தைச் சிறிதும் காட்டாள்
ஜெகமெனும் ஏக தேசமும் தெரிக்காள்
எவ்விடத் திருளும் என்அகச் சுவரெனக் கனஇருள் வடிவம் காட்டும் கொடியாள்
இரவிது பகல்இது இன்பிது துன்பிது
ஒளிவெளி இதுவென ஒன்றும் தெரிக்காள்
இறுக்கும் அரக்கி இவளொடும் இருந்தே
எளியேன் முயங்கிடல் என்தவம் என்கோ
40
(அவள் பெற்ற பிள்ளை)

முற்றும் அஞ்ஞான மூடப் பிள்ளை
ஒருவன் பிறந்தனன் ஒடிவான் அவன்தனால்
பானுவின் ஒளியைப் படரிருள் மூடல்போல்
என்அகக் கண்ணையும் என்புறக் கண்ணையும்
அங்கையால் மூடி அலக்கழிப் பான்எனைத் தன்னைஇன் னான்எனத் தானும் காட்டான்
என்னைஇன் னான்என எண்ணவும் ஒட்டான்
ஏடுறும் எண்ணும் எழுத்தும் உணரான்
தாயினும் கொடியன் ஆயினும் என்தன்
விதியை நொந்து விருப்பின் வளர்த்தேன்
50
இவன்தன் வாழ்க்கையும் வாழ்க்கையோ என்ன
மதிப்பவர் ஆரெனை வையகம் மகிழ்ந்தே
வையக மகிழ்ச்சி வையகம் நெருப்பாம்
மருளுறு சிறுவன் வளர்நாள் தொடுத்தே
உறவகன் றார்யான் அறிவகன் றிட்டேன்
(இரண்டாம் மணவினைக் கர்த்தா)

செப்புறும் தெய்வச் செயலென் கேனோ
இருதொ டக்குகள் இயலா தென்றே
தொடக்குப் பற்பல அடுக்கடுக் காயின
ஆரோ பசுபதி அவன்வடி வழலாம்
அங்கண் மூன்றாம் அருட்சத்தி மானாம்
60
மண்ணும் விண்ணும் மாலய னோரால்
நேடியுங் காணா நீள்பத முடியனாம்
எழுமலை எழுகடல் எழுபுவி எழுகார்
ஆன எவையும் அளித்துநோக் குவனாம்
ஊர்தரும் மாருதம் உயிர்ப்பாய் உளனாம் உயிரெழு வகுப்பையும் ஊட்டியுறக் குவனாம்
ஊழிகள் தோறும் உள்ள ஒருவனாம்
உரைகொண் டோ தரும் உயர்வே தாகமம்
உற்ற கலைகள் உயரிய நிலைகள்
அண்ட பிண்டம் அவற்றின் துறைகள்
70
சாரும் இறைகள் சராச ரங்கள்
வளமுறு வர்ணா சிரம வகைகள்
வகுக்குறு வகுப்பினும் வதிவாழ்க் கையனாம்
சதிர்மா மாயை சத்திகள் கோடி
மன்னிய அரங்கிடை வதிபெற் றியனாம் அவன்றான் யாரோ அறியேன் யானே
அறிதர வேண்டும் அப்பரு வத்தே
மாயை என்னும் மாதினைக் கொணர்ந்தே
சிறுகருங் காக்கைக் குறுகுறுங் கழுத்தில்
கனம்பெறு பனங்காய் கட்டிய வாறெனக்
80
கட்டிப் புண்ணியங் கட்டிக் கொண்டனன்

(இரண்டாம் மனைவி)

விடுத்தெனைப் புண்ணியன் விலகலும் அவள்தான்
விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு
கொள்ளிவாய்ப் பேய்களோர் கோடி நின்றே
தடித்த குழவியைப் பிடித்தது போல மற்றவள் என்னை மணந்து கொண்டனள்
பெண்ணடை அனைத்தும் பெருங்கதை யாகும்
அடுத்தவர் என்னை அந்தோ கொடிய
அருந்தளை ஏனென அறைந்தெனை அகன்றனர்
அகமெலாம் பகீரென அனந்த உருவாய்
90
அவ்வவ் வுருகொண் டணைத்துக் கெடுப்பள்
காற்றினை ஒருசிறு கரகத் தடைப்பள்
கடல்ஏ ழினையும் கடுகிடை முகப்பள்
வகைவகை யாயுடல் வனைந்து வகுப்பள்
வையக முற்றும் வாயில் மடுப்பள் பகலிடை நள்ளிருள் இருக்கப் பண்ணுவள்
இருளில் பானுவை எவர்க்குங் காட்டுவள்
அண்டம் எல்லாம் அணுவிற் செறிப்பள்
அணுவை அண்டமாய் ஆக்கி நகைப்பள்
பொய்யை மெய்யாப் பொருந்தி மகிழ்வள்
100
பொருந்தும் மெய்யைப் பொய்யாச் செய்வள்
அடர்வஞ் சகக்கழங் காடற் பிரியாள்
காணாப் பன்னிலை கலையுடன் காட்டுவள்
இருளை இரிக்கும் இந்து ரவிகளைப்
படைத்திங் கியற்றுவள் பற்பல ஜாலம் பிரமனை வலக்கைப் பிடிக்குள் அடக்குவள்
இடக்கையில் மால்பதி ஏந்தித் தரிப்பள்
தலையிடை உருத்திரன் தன்பதி தெரிப்பள்
குளிரெழு கடல்இவள் குளிக்குந் தடமே
அண்ட மெல்லாம் கொண்டையில் முடிப்பள்
110
ஜெகமெலாம் கலைக்குள் சேர்த்துக் கட்டுவள்
உடம்பிடை உரோமம் ஒவ்வொன் றிடையே
புவனமொன் றாகப் பொருந்தச் சமைப்பள்
எவரையும் கணத்தில் எய்தி மயக்குவள்
இக்கொடும் பாவி என்மனை யானது பிடாரியைப் பெண்டாய்ப் பெற்றது போலும்
அனுகூ லச்சொலை அகத்திடை மதியாள்
அடிமடி பிடிப்பள் அரியவம் பிசைப்பள்
உறங்க விடாளவள் உறங்குபாய் சுருட்டாள்
மடிமாங் காயிடுங் கொடுமைக் கிளையாள்
120
சாகவும் விடாளவள் சார்பழி தளராள்
தவத்தில் இசையாள் பவத்தின் நசையால்
மருட்பேய் என்ன மதித்திட வாட்டிப்
படைத்தென் மானம் பறக்கச் செய்வள்
மான மகற்றியும் மனைவிட் டேகாள் இரவும் பகலும் எனையிழுத் தணைப்பள்
இவளாற் படுமிடர் இம்மட் டிலவே
புகலப் படுமோ புகலின் இருசெவி
பொருந்துளங் கைத்திடும் போதும் போதும்
மல்லாந் துமிழின் மார்பின் மேலெனச்
130
சொல்லுவர் அதனால் சொல்வது மரபல

(இரண்டாம் மனைவி பெற்ற பிள்ளைகள்)

(மூத்த பிள்ளை)

கொடுந்தவம் புரிந்தொரு குரங்குபெற் றாற்போல்
மலைக்கப் பெற்றிட மனம்எனும் இளைஞன்
உலக்கைக் கொழுந்தென ஒருவன் பிறந்தனன்
வருமிவன் சேட்டை வகுக்கவாய் கூசும் விதிவிலக் கறியா மிகச்சிறிய னாயினும்
விண்மண் நடுங்க வினைகள் இயற்றிக்
காமக் குழியில் கடுகிப் படுகுழி
விழுமதக் களிறென விழுந்து திகைப்பன்
பதியை இழந்த பாவையின் செயல்போல்
140
கோபவெங் கனலில் குதித்து வெதும்புவன்
நிதிகவர் கள்வர் நேரும் சிறையென
உலோபச் சிறையில் உழன்று வாழ்வன்
வெற்பெனும் யானையை விழுங்கும் முதலை
முழுகிக் கடலில் முளைத்திடல் போல மோகக் கடலில் மூழ்கி மயங்குவன்
மதுகுடித் தேங்கி மயக்குறு வார்போல்
மதத்தால் வீறி மதங்களில் வியப்பன்
பட்டினி இருக்கும் வெட்டுணி போல
மச்சரங் கொண்டு மகிழ்கூர்ந் தலைவன்
150
காசில் ஆசை கலங்குறா வேசை
எனினும் விழிமுனம் எதிர்ப்படில் அக்கணம்
அரிய தெய்வமென் றாடுவன் பாடுவன்
அணிகள் அணிவன் அடியும் பணிவன்
எலும்பைச் சுரண்டும் எரிநாய் போலச் சுற்றுவன் பற்றுவன் தொழுவன் எழுவன்
கணத்தில் உலகெலாம் கண்டே இமைப்பில்
உற்ற இடத்தில் உறுவன் அம்மா
சேய்மை எல்லாம் செல்லற் கிளையான்
பித்தோங் கியஉன் மத்தனாய்த் திரிவான்
160
சொல்வழி நில்லான் நல்வழி செல்லான்
சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன்
வெட்டிலும் துணியான் கட்டிலும் குறுகான்
மலக்கி ஈன்ற மாதினும் பாவி
கள்ளது குடித்துத் துள்ளுவான் போல மதத்தாற் பொங்கி வழிந்து துள்ளுவன்
முத்தந் தரல்போல் மூக்கைக் கடிப்பன்
மறைசொல் வான்போல் வளர்செவி கிள்ளுவன்
சற்றும் இரங்கான் தனித்துயில் கொள்ளான்
கூவிளிச் செய்வன் கூடுவன் பலரை
170
கூவி அதட்டினும் கோபங் கொள்வான்
இங்கு முள்ளான் அங்கு முள்ளான்
படைக்கு முன்னே பங்கு கொள்வான்
மடியில் நிறுத்தி வாய்மை வழங்கினும்
வண்ணான் கல்லிடை வறிஞர் சீலையை ஒலித்திடல் போல உரத்திக் கத்துவன்
என்னைத் தாதையென் றெண்ணான் சொல்லும்
வாய்மை எல்லாம் வண்புனல் ஓவியம்
ஆகக் கொள்வான் அவன்பரி சுரைக்கேன்
பிறந்தஇப் பாவி இறந்தான் இலையே
180
சென்றநாள் எலாமிச் சிறுவனால் அன்றோ
வருசுகங் காணா வைச்சுமை நேர்ந்தேன்
திறந்திவன் செயலைத் தினைத்துணை விடாது
செப்பின் கற்கள் சிதைந்து கசியும்
கனத்த மரங்கள் கண்ணீர் பொழியும் கடவுளர் இவன்செயல் காணு வாரேல்
இமையாக் கண்களை இமைத்திடு வாரால்

(இரண்டாவது பிள்ளை)

காசிபன் மனைவிமுன் கடுந்தவம் புரிந்து
பையுடைப் பாம்பைப் பயந்தது போன்று
புத்தி என்னும் புத்திரன் தன்னை
190
ஈன்றனள் அவனோ எளியரில் எளியன்
வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன்
தாயொடும் பழகான் தமையனோ டணையான்
தறுக ணாளரிற் குறுகியுற வாடான்
பாவம் என்னில் பதறி அயர்வான் பாடு படற்குக் கூடான் உலகர்
கயங்கு நெறியில் உயங்கி மயங்குவன்
பாழ்நிகர் புந்தியர் பாலிற் பொருந்தான்
எப்பா டும்படான் எவரையும் கூடான்
கபடரைக் காணில் காதம் போவான்
200
கங்குலும் பகலும் கருதுவிவ காரத்
தடத்திடை வீழ்ந்து தயங்குறு நயங்கள்
சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும்
அடங்குவன் வறிதே அமைதல் இல்லான்
இவனை மடியில் இருத்தித் திடமொழி செப்பிடச் சோர்வு செறிவ தெனக்கே
இவன்பால் செய்வ தேதும் அறியேன்

(மூன்றாவது பிள்ளை)

செறிதரு கோளுள சேயிழை யாள்பினும்
நையப் புணர்ந்து நாள்பட வருந்தி
நாடி நாடி நாயைஈன் றதுபோல்
210
உணர்விலி என்றே உலகர் ஓதும்
சித்தம் என்னும் சிறிய குழவியைப்
பயந்து கரத்தில் பதற எடுத்தனள்
கரைதரு விண்ணீர்க் கடிதடம் ஆகக்
கதிர்விடும் உடுக்கள் கறங்குமீ னாக மதியைத் தாமரை மலராய் மதித்ததில்
மூழ்கப் பிடிக்க முன்னங் கொய்திட
எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும்
நேரா திளைத்தே நிலைகள் பற்பல
வான்கண் டவன்போல் வாயாற் கொஞ்சுவன்
220
எனையும் கூவுவன் இவனிடர் பலவே
இடர்பல இயற்றி இழுக்கும் கொடியன்

(நான்காவது பிள்ளை)

இவன்செயல் நிற்க இவன்தாய் வயிற்றில்
தாருகன் என்னும் தறுகண் களிற்றைத்
தந்தமா யைக்குத் தனிமூத் தவளாய் அகங்கா ரம்எனும் அடங்காக் காளை
அவனி மூன்றும் அதிர்ந்து கவிழக்
கடைமுறை பெற்றுக் களித்தனள் அவன்செயல்
கருதவும் பேசவும் கனிவாய் கூசுமே
கூற்றுவர் கோடி கொண்டுதித் தால்என
230
முளைத்து வளர்ந்தனன் மூத்தவன் மூழை
இளையவன் காளை எனும்இலக் கியமாய்
முன்னுள மூவரை முடுகி ஈர்த்தே
எண்ணில் விளையாட் டெழுப்புந் திறத்தன்
எல்லா ஆற்றலும் என்பால் உளதெனத் தருக்குவன் இவன்தன் சங்கடம் பலவே
தன்னைத் தானே தகைமையில் மதிப்பன்
தரணியில் பெரியார் தாம்இலை என்பான்
மாதின் வயிற்றில் வந்தவன் எனாது
தானே பிறந்த தன்மைபோல் பேசுவன்
240
விடியும் அளவும் வீண்வா திடுவன்
வாயால் வண்மை வகைபல புரிவன்
ஓதவன் பெருமை ஈதவன் இயல்பே
சொல்லினும் கேளாத் துரியோ தனன்என
வானவர் தமக்கும் வணங்கா முடியன் முன்வினை யாவும் முற்றும் திரண்டே
உருக்கொடிங் கியம்பொணா ஊறுகள் இயற்றுவன்
பிள்ளையும் அல்லன் கொள்ளியும் அல்லன்
இன்னும் இவன்செயும் இடர்பல வற்றை
எவர்பால் சொல்லி என்துயர் ஆற்றுவேன்
250
(மூன்றாம் மணவினைக் கர்த்தாவும் மூன்றாம் மனைவியும்)

பாதகி துன்பம் பவக்கடல் ஏழும்
மக்கள் துன்பம் மலையோர் எட்டும்
நீளல்போ தாதென நெஞ்சில் நினைத்தோ
அவளது சூழ்ச்சி அற்புதம் அற்புதம்
தொல்லை மரபில் தொழில்பல கற்ற உலவுறு காமிய ஒண்டொடி என்னும்
கபடவஞ் சகியாம் களத்தினைக் கொணர்ந்து
பேய்பிடித் தவன்பால் பெரும்பூதம் கூட்டித்
தான்மணந் ததுபோ தாதிங் கென்றுபின்
மாற்றுகா லுக்கு மறுகால் ஆக
260
மாட்டி மிகமன மகிழ்ந்தாள் கூர்வேல்
கண்ணிணை யாள்நெடுங் கடல்சூழ் உலகில்
நிறைந்துள யாரையும் நெருங்குவள் கணத்தில்
இவள்செயும் வீரம் எண்ணி விளம்ப
உடலெலாம் நாவாய் உறினும் ஒண்ணா ஒருத்தியே இரண்டங் குருகொடவ் வவற்றில்
பலவாய்ப் பலவுளும் பற்பல வாய்உரு
பொருத்த முறவே புரிவள்அவ் வவற்றில்
பலகால் புணர்ந்து பயன்வலி போக்கி
ஓருருக் கரும்பும் ஓருருக் காஞ்சியும்
270
ஓருரு அமுதமும் உண்ண அளிப்பாள்
விட்டிவை எல்லாம் பட்டினி யாக்குவள்
ஓருரு வடிவால் உயர்பஞ் சணைமேல்
அகமகிழ் சுரதம் அளித்துக் களிப்பள்
ஓருருத் தன்னால் உறுநிலப் பாய்மேல் என்பு நோவ இழுத்தே அணைவள்
இங்ஙனம் பற்பல ஏழைக் குறும்புகள்
இயற்றி எவருமே ஏக்கங் கொளவே
இவள்முன் நம்செபம் என்றும் சாயா
அரகர என்றே அரற்றி மெலிவேன்
280
(அவள் பெற்ற மூன்று பிள்ளைகள்)

இவ்வா றென்னை இழைத்திடுங் கொடியாள்
முக்குணம் மூன்றும் மூவுரு எடுத்தே
வயிறு கிழிய வந்த சிறார்கள்
மூவர் தமையுமம் மூவரும் அறியார்
வெலவரும் இவரால் மேலொடு கீழ்நடு ஆய உலகும் அவ்வுல குயிரும்
பற்பல நெறியில் பாடுபட் டாரெனில்
எளியேன் பாடிங் கியம்பவும் படுமோ
இவர்கள்தம் இயல்பை எண்ணவும் பயமாம்
பாரெலாம் தாமாய்ப் பரவும் இவர்தாம்
290
ஏற்றுவர் இறக்குவர் எங்கு நடத்துவர்
இயற்றுவர் கீழ்மேல் எங்கு மாக
உவகை ஊட்டுவர் உறுசெவி மூடத்
திட்டுவர் பலவாய்த் திரண்டு திரண்டே
ஆற்றுறு மாற்றலை ஆற்றல் அரிதாம் இவ்வுல கதனில் என்கண் காண
ஆயிழை யாளை ஆய்ந்து மணந்த
நாளில் தொடங்கிஇந் நாள்பரி யந்தம்
மனஞ்சலித் திடவே வலிய விலங்கினைத்
தாளில் இட்டுத் தயங்கி அலைந்தேன்
300
வீண்சஞ் சலமென விளம்பும் துகளை
முடிமூழ்க வாரி முடித்திட் டேனால்
ஈட்டிய பொருளால் இற்பசு ஈந்தே
எருமை தன்னை அருமையா யடைந்தனோ
ஆற்ற முடியா தலைவேன் எனவும் குறித்தங் கெடுத்திடும் கூவல் நீரை
விழற்கு முத்துலை வேண்டிட் டிறைத்துத்
துணைக்கரம் சலித்தே துயருற் றேனோ
காற்றினும் விரைந்தே காரான் பாலைக்
கமரிடை ஏனோ கவிழ்த்தும் கலங்குவேன்
310
கலநீர் தன்னைக் கண்ணிற் சிந்திக்
கழறிக் குழறிக் கனிஉடல் களைக்கச்
சிலைநேர் நுதலில் சிறுவியர் வரும்ப
அருந்தொழில் செய்திங் கடைந்த பொருளைச்
சிவபுண் ணியத்தில் செலவிற் கலவாது பெண்சிலு குக்குப் பெரிதும் ஒத்தேன்
பகலும் இரவும் பாவிகள் அலைத்தனர்
இவர்கள் சல்லியம் ஏற்பவர் ஆரெனக்
கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன்
கிணற்றில் மண்ணைக் கெல்லப் பூதம்
320
தோன்றிய தென்னும் சொல்லை ஒத்தது
இவரூ டாட என்னால் முடியுமோ
அவளுக் கிவள்தான் அறியவந் தாளெனும்
மூன்று மாதரும் முழுப்பாய் சுருட்டிகள்
இவர்களில் ஒருவரும் இசையவந் தாரலர் இச்சை வழியே இணங்கி வலிவில்
மணமது கொண்டு வாழ்ந்து வருகையில்
சண்டன் மிண்டன் தலைவர் என்ன
புவிமிசைப் பாதகர் போந்திங் குதித்தனர்
இவரால் நேர்ந்த எண்ணிலாத் துயரைப்
330
பொறுப்ப தரிதாம் வெறுப்பது விதியே
பாவ மின்னும் பற்பல உளவே

(குடியிருக்கக் கொண்ட வீடு)

குடும்பத் துடனே குடித்தனஞ் செய்யக்
குடிக் கூலிக்குக் கொண்ட மனையில்
கண்ட காட்சிகள் கனவிரோ தங்கள் இராமா யணத்தும் பாரதத் தும்இலை
இழிவினும் இழிவது எண்சாண் உள்ளது
மலமும் சலமும் மாறா ஒழுக்கது
சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது
சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்பது
340
என்புதோல் இறைச்சி எங்கும் செந்நீர்
ஆய்ந்து செய்த ஆகர முற்றது
அகலல் அணுகல் புகலல் இகலல்
அணிகள் துணிகள் அணிவ தாய
சால வித்தைகள் சதுரில் கொண்டது கிடந்தும் இருந்தும் நடந்தும் பற்பல
பகரிம் மனையால் படும்பா டதிகம்

(வீட்டுத் தலைவரும் குடிக்கூலி நிர்ப்பந்தமும்)

இம்மனைத் தலைவராய் எழுந்த மூவர்
தறுகட் கடையர் தயவே இல்லார்
பணிசிர முதலாய்ப் பாதம் வரையில்
350
வாது செய்திடும் வண்கால வாதி
பெருகுறு கள்ளினும் பெரிதுறு மயக்கம்
பேதைமை காட்டும் பெருந்தீப் பித்தன்
கொடுவிடம் ஏறிடுங் கொள்கைபோல் இரக்கங்
கொள்ளா திடர்செய் குளிர்ந்த கொள்ளி இவர்கள் என்னோ டிகல்வர் இரங்கார்
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார்
பிண்ட மென்னும் பெருங்குடிக் கூலி
அன்றைக் கன்றே நின்று வாங்குவர்
தெரியா தொருநாள் செலுத்தா விட்டால்
360
உதரத் துள்ளே உறுங்கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும் எண்ணெரி ஊட்டி
அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்
இவர்கொடுஞ் செய்கை எண்ணுந் தோறும்
பகீரென உள்ளம் பதைத்துக் கொதித்து வெதும்பும் என்னில் விளம்புவ தென்னே

(குடும்பத் தலைவனின் வெளி விவகாரம்)

சினமிகும் இவர்தம் செய்கைகள் கனவிலும்
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர்
மற்போர் கருதி வந்தவர் போல
ஓதும்வே தாந்தம் உரைப்பர் சிலபேர்
370
வாட்போ ரினுக்கு வந்தவர் போல
வயங்குசித் தாந்தம் வழங்குவர் சிலபேர்
தண்டா யுதப்போர் தாங்குவார் போல
இதிகா சத்தை இசைப்பவர் சிலபேர்
உலக்கைப் போரை உற்றார் போல இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்
கற்போர் விளைக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்
விவகா ரங்கள் விளம்புவர் சிலபேர்
380
மடிபிடி போர்க்கு வாய்ந்தவர் போல
மததூ ஷணைகள் வழங்குவர் சிலபேர்
கட்குடியர் வந்து கலக்குதல் போலக்
காம நூலைக் கழறுவர் சிலபேர்
விழற்கு நீரை விடுவார் போல வீண்கதை பேச விழைவார் சிலபேர்
இவர்கள் முன்னே இவருக் கேற்ப
குரல்கம் மிடவும் குறுநா உலரவும்
அழலை எழவும் அவரவர் தம்பால்
சமயோ சிதமாய்ச் சந்ததம் பேசி
390
இயன்ற மட்டில் ஈடுதந் தயர்வேன்

(அவனது உள் விவகாரம்)

பின்னர் மனையின் பின்புறத் தேகிக்
கலக்கு மலத்தைக் கடிதே கழித்துக்
கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று
பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச் சோமனைப் போலவெண் சோமனைத் துவைத்து
நன்னீர் ஆடி நறுமலர் கொய்து
தேவருக் கேற்ற திரவியங் கூட்டிப்
பாவையை வைத்துப் பாடி ஆடும்
சிறாரைப் போலச் செய்பணி யாற்றி
400
மண்ணின் சுவர்க்கு வண்சுதை தீட்டல்போல்
வெண்ணீ றதனை விளங்கப் பூசிப்
புகழ்ருத் ராக்கப் பூனை என்ன
உற்ற செபவடம் உருட்டி உருட்டிக்
குரண்டகம் போன்று குறித்த யோகம் செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியிற் பூசனை அமர்ந்தங் காற்றி
ஊன்பிண் டத்திற் குறுபிண்ட மீந்து
குடிக்கூ லிக்கடன் குறையறத் தீர்த்துப்
பகல்வே டத்தால் பலரை விரட்டி
410
(அவன் பரத்தையோ டயர்தல்)

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய்ப் போகின் றதுவே.

இது, முத்துசாமி முதலியாரின் திருமணத்திற்குத் தாம் வர இயலாமையைக் குறித்து வரைந்த திருமுகம்.
முத்துசாமி முதலியார் வீரசைவர். அடிகளின் மாணாக்கர்களில் ஒருவர். தாம் இயற்றிய தோத்திரப்
பாக்களுக்கு அடிகளிடம் சாற்றுக்கவி பெற்றவர். அடிகள் வடலூரிலிருந்த போது சென்னையில்
இவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அடிகள் எழுந்தருளி வாழ்த்த வேண்டுமென விரும்பினார்.
அவ் விருப்பம் நிறைவேறவில்லை. அதனால் வருந்திய முத்துசாமி முதலியார்க்கு அடிகள் இக் குடும்ப
கோரத்தைப் பாடி, கொந்தமூர் சீனிவாச வரதாசாரியர் மூலமாய் அனுப்பினர். முதலியார் இவ்வகவலை மனப்பாடஞ்
செய்து வைத்திருந்தார். மனப்பாடமாக அவர் சொல்லக் கேட்டதனை மோசூர் கந்தாசாமி முதலியார் பி. ஏ. எழுதி வைத்தார்.
அது சித்தாந்த சரபம்கலியாணசுந்தர யதீந்திரரால் பார்வையிடப் பெற்று, காஞ்சி நாகலிங்க முதலியாரால்
நடத்தப்பெற்ற தொழிற்கல்வி (Industrial Education) 1914 ஜூலை (ஆனந்த, ஆடி தொகுதி 1, பகுதி 4)
இதழில் ஒருபாதியும், ஆகஸ்டு (ஆவணி, தொகுதி 1, பகுதி 5) இதழில் மறுபாதியுமாக வெளியாயிற்று.

4. திருமுக அகவல் (430)

நிலைமண்டில ஆசிரியப்பா

430. இது கூறும் பொருள் முழுவதும் நன்கு விளங்கவில்லை.
காப்பு
1 அகண்டமெய்ஞ் ஞான அற்புத அமல
பரம்பர அனாதி பகவ பராபர
புண்ணிய சைவ போத பூரண
சச்சிதா நந்த சாக்ஷாத் கார
நித்திய நிரஞ்சன நிமல நிராமய எண்குண விநோத இன்ப சுபாவ
சுத்த நிட்கள சுயம்பிர காச
சிவக்கியான சித்தி சித்தோப தேச
பதிபசு பாசப் பண்புரை தேசிக
விபூதி ருத்திராக்க பூடண வடிவ
10
சர்வ வல்லப சாந்த சித்த
தயாநிதி எனவளர் சாமி யவர்கள்
ஸ்ரீதிவ் வியோபய செந்தா மரையாம்
திருவடிக் கடியேன் திருச்சிற் றம்பலம்
காசறு காவிரி கங்கை யாதிய
வாச நீரால் மஞ்சனம் ஆட்டி
மல்லிகை முல்லை மாமலர்க் கொன்றை
மயிலை முதற்பூ மாலை சாத்தி
தூய வாசத் தூப தீப
நைவேத் தியமுதல் நண்ணுப சாரம்
20
கூடுற இயற்றிக் கூவிள பத்திரம்
ஆயிரம் அவையால் அருச்சனை செய்து
உள்ளம் குழைய உரோமம் சிலிர்ப்பப்
பாடி ஆடிப் படிமிசை வீழ்ந்து
அன்புறும் அங்கம் ஐந்தொடும் எட்டொடும்
இன்புறத் தெண்ட னிட்டவிண் ணப்பம்
திருவளர் உலகில் சீர்பூ ரணமென்(று)
ஒருபெயர் நிறீஇ ஓங்கிய தணிகைக்
குன்றிடை விளங்கும் குமார தேசிகன்
நன்றிடை யாவகை நவின்மணி வார்த்தை
30
கார்நிகர் வண்கையும் கல்விப் பெருக்கும்
பார்நிகர் பொறையும் பண்பும் பான்மையும்
சீரும் சிறப்பும் திறனும் செல்வமும்
யாரும் புகழ்தரு மியல்புநல் லறிவும்
எம்பால் அன்பும் எமதருள் உடையோர்
தம்பால் சார்பும் தணப்புறாத் தன்மையன்
தானம்ஈ ரெட்டும் தருவோர் நாண
ஈனமில் அவற்றின் எல்லைமேல் ஒன்றின்
நான்கிலோர் பாகம் நண்ணிய தானம்
தான்கிளர் உலகில் சால்புடை யவர்தம்
40
கண்களிப் புறவும் காதிசை பெறவும்
ஒண்களிப் பொடுமன முவந்துவந் துருகவும்
தருபவன் புரசைச் சபாபதி எனும்பெயர்
மருவிய கலைவலோன்431 மகிழ்வொடும் கேட்க
எம்மிடை ஒருவன் எளிமையில் சிறந்தோன்
செம்மையிற் போந்தென் சிறுமனைக் கிழத்தி
எந்தாய் நுந்தமை ஈன்றநற் றாயின்
நந்தா அருள்திரு நாமம் கொண்டனள்
ஆங்கவள் தன்னை அப்பெய ரால்அழைத்(து)
ஈங்கெவ் வேலையும் இடுதற் கஞ்சினேன்
50
ஈதல துமக்கும்ஓர் இழிவுண் டிதனால்
ஆதலின் அப்பெயர் அகற்றுதற் காயிரம்
பொன்வேண்டும் என்றனன் பொன்வடி வல்லது
பொன்வே றிலையால் பொன்னுடை யவன்எம்
மாதுலன் ஆதலின் வலிவிற் கைக்கடன்
வாதுறக் கேட்டலும் வாங்கலும் ஈனம்
தரம்பெறும் உமது தந்தையோ எனில்அவர்
இரந்துழல் கின்றதை யாவரும் அறிவர்
நின்மல ராகிய நீரோ என்றால்
நென்மலி உலகில் நின்கண் காண
60
ஒருமணஞ் செய்தோர்க் குறுதுயர் பலஉள
இருமணஞ் செய்த எமக்கெத் தனையோ
சங்கடம் அதுநின் றனக்குந் தெரியும்
எங்கணும் நின்போல் எமக்கன் பினர்இலை
அதனால் நின்பால் அவனை அனுப்பினம்
இதமே அன்றி அகிதம் இசையா
நெடும்பொற் புடையோய் நீயும் எம்போல்
குடும்ப பாரம் கொண்டனை ஆதலின்
ஆயிரம் என்றதில் அரைப்பங் கேனும்
காயகம் அறியோய் காற்பங் கேனும்
70
இல்லைஎன் னாமல் எம்முகம் நோக்கி
நல்லைநீ அவற்கு நல்குவிப் பாயே.

புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் மேல் ஆறு
அடிகளில் அட்டாவதானம் குறிப்பிடப்பெற்றது.

5. திருமுகப் பாசுரங்கள்

5.1 மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் 288-ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகத் திருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களுக்கு வரைந்த திருமுகப் பாசுரம்.
(432). சென்னைப்பட்டணத்தைச் சார்ந்த மயிலையில் அடியேன் சிதம்பரம் இராமலிங்கம்.
ஆனந்த வருடம் புரட்டாசி மாதம் உக ஆம் தேதி* சுவாமிகள் அடிகட்கு அனுப்பியதாக
இங்குக் குறிப்பிடப்பெறும் திருமுகம் கிடைக்க வில்லை. * 5-10-1854

5. 2 திருவாவடுதுறை ஆதீனம் வித்துவான் தாண்டவராயத் தம்பிரான் சுவாமிகளுக்கு வரைந்த திருமுகப் பாசுரங்கள்

1 நூற்றுப்பன்னிரு சீரான் வந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அணிவளரும் உயர்நெறிகொள் கலைகள்நிறை மதிமகிழ்வை
அடையும்ஒளி யுடைய சடையோய்
அருளொழுக அமுதொழுக அழகொழுக இளநிலவின்
அளியொழுக ஒளிர்மு கத்தோய்
அமலநிலை உறவும்உறு சமலவலை(433) அறவும்உணர்
வருள்கருணை மிகுகு ணத்தோய்
அடியர்வினை அகலஒரு பரமசுக நிலையருளு
மதுகருது திருவு ளத்தோய்
அநகசுப விபவசுக சரிதரக சிரகமந
அதுல அதுலித பதத்தோய்
அகிலசர அசரஅப ரிமிதமித அணுவும்அணு
வணுவும்இவை எனஉ ரைத்தோய்
அகிதவித விவிதபரி சயசகல விகலஜக
வரஸரஜ தளம்இ ழைத்தோய்
அகளமன ரமணவபி நிகடவபி நிபிடதட
அநதிசய சுகம்அ ளித்தோய்
அணுபக்ஷம் இதுசம்பு பக்ஷம்இது காண்கஎன்
றன்புடன் உரைத்த பெரியோய்
அதிக்கிராந் தத்தியல்பு திக்கிராந் தத்தியல்பின்
அமைதிஇஃ தென்ற அறவோய்
அதிகார போகஇல யங்கள்இரு வகைஇயல்
அறிந்திட உணர்த்தும் உணர்வோய்
அருவம்இஃ துருவம்இஃ தருவுருவம் இஃதென
அறைந்தறி வுறுத்தும் அறிவோய்
அபேதசம் வேதந சுயஞ்சத்தி இயல்எலாம்
அலைவற விரித்த புகழோய்
அநநிய பரிக்கிரக சத்திவிளை வெல்லாம்கை
ஆமலகம் எனஇ சைத்தோய்
அத்துவா நெறிஆறும் ஒத்துவா னெறியா
றடைந்திடுக என்ற பரிசோய்
அவுத்திரியின் உத்தரம் உனக்கிசைவு றுத்துதும்
அமர்ந்திடுக என்ற இனியோய்
1/4
(433). சமலம் ஖ மும்மலம். சமயவலை - ச.மு.க. பதிப்பு.
பணிவளரும் நிபுணகண பணகரண பரணவண
பரதயுக சரண புரண
பரம்பர சிதம்பர திகம்பர நிரந்தர
பரந்தர விளங்கு பரம
பகடபட தடவிகட கரடகட கரியுரிகொள்
பகவ அரகர என்னவே
பவன்தகு சிவன்தனை உவந்தனை சுவந்தனை
பகர்ந்திடுக என்ற அமுதே
பகர்பர உகரபர மகரகுண குணிகள்உறு
பரிசறிய உரைசெய் அரசே
பயன்தரு வயிந்துவ துவந்திகழ் சிவம்புகல்
பதம்தெளிய அருள்செய் இறையே
பதசிகர வகரநெறி அகரநக ரமகரஉ
பயஅபய நிலைசொல் மலையே
பவந்தெறு நவந்தரு குவம்பரி பவம்பொடி
படும்படி எனும் புனிதமே
பதியுதவு பதிதனது பரிசும்அஃ தடையும்ஒரு
பசுஇயலும் அருள்செய் பொருளே
பந்தநிலை அந்தநிலை இந்தநிலை என்றுபர
பந்தமொழி தந்த மணியே
படியும்இடர் வடியும்இருள் விடியுமணி மொழிமறைகள்
படியும்என நொடிம ருந்தே
பஞ்சமல கஞ்சுகமும் எஞ்சும்வகை பஞ்சம்இலை
பஞ்சமகம் என்ற நிதியே
பதிதநெறி விடுகஒரு பதிதனெறி தொடுகஒளி
படரும்வகை எனும்என் உறவே
பங்கம்அற அங்குமுள இங்குமுள எங்குமுள
பண்டைவெளி என்ற ஒளியே
பலிதஅநு சிதஉசித யுகளஇக பரம்இரவு
பகல்என விளம்பு வளமே
பன்னிலையும் முன்னிலையும் நின்னிலையும் என்னிலை

படிந்துவிடு கென்ற நன்றே
1/2
திணிவளரும் அறிவுகொடு தொடர்வரிது பெரிதுபர
சிவம்அது வெனும் செல்வமே
சிவசா தனம்பெறார் பவசா தனம்பெறுவர்
தெளிகஎனும் அளிகொள் குருவே
திருநீறு காண்நினது கருநீறு காணுவது
தேர்ந்துணர்க என்ற தெளிவே
சிவமேவு சமயம்அது தவமேவு சமயம்இது
சித்தம்என ஓது முதலே
சிவனடியை வாழ்த்தாத வாய்ஊத்தை வாய்கொடிய
செவ்வாய் எனச்சொல் நிறைவே(434)
சிவமான்மி யம்புகாக் காதுகா தென்னும்
தெலுங்கமொழி என்ற ஒன்றே
சிவனடி வணங்காத தலைசிதலை அவன்விழாத்
தெரிசியாக் கண்கள் புண்கள்
சிவனைநினை யாச்சிந்தை நிந்தையாம் இதுநமது
சித்தாந்தம் என்ற திருவே
திகழ்பரம னடவும்விடை மனையினமும் அவன்முனோர்
செறிகமரின் அமுதுண்ட நாள்
சேர்வுற விடேல்என்ற ஒருமரக் கறியும்(435) அச்
சிவபிரான் விடய மாகத்
திருவாத வூரடிகள் திருவாய் மலர்ந்தருள்
திருக்கோவை யார்செய் கையுஞ்
செப்புகஎ னக்கடாஅய் நின்றவர்க் கிறைமொழி
தெரிக்கும் சிறப்பு வாய்ந்தே
சீரைந் தெழுத்தினால் இலகுநக ரின்கண்ஓர்
திருவைந் தெழுத்தின் ஓங்கும்
தேசிகத்(436) தண்ணமுத வான்கடல் படிந்தருள்
தெள்ளமுதம் உண்டு தேக்கிச்
செறிபவக் கோடையற அருண்மழை பொழிந்தொளி
சிறந்தோங்கு சீர்க் கொண்டலே
செய்யதாண் டவராய தூயவாழ் வேநினது
திருவடிக் கன்பு கொண்டே
3/4
(434). நிறையே - ச. மு. க. பதிப்பு.
(435). அரிவாட்டாயநாயனார் வரலாற்றைக் குறிப்பது.
(436). சீரைந் தெழுத்தினால் இலகும்நகர் - (திரு) ஆவடுதுறை திருவைந்தெழுத்தின்
ஓங்கும் தேசிகர் - நமசிவாய தேசிகர் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதி குருமூர்த்திகள்.
தணிவளர் விராகமது பெற்றிலேன் காமரந்
தானும்அறி யேன் துன்பினைத்
தலிதஞ்செ யேன்மங்கு லங்கொண்டு நகபதந்
தன்னிற் பருத்து வினையைத்
தாங்குசும் மாடாயி னேன்நவ விராகமுதல்
சாற்றுசும் மாடு மட்டுந்
தங்குமொழி முதலைஉடை யேன்முதற் கயலில்
தயங்குமொரு நாமம் உடையேன்
தகுமுறைக் கடைமூன்றி னுஞ்சுவசி யுற்றிலேன்
சதுரிலேன் பஞ்ச நயவேன்
சட்டியில் இரண்டின்ஒன் றேய்ந்திலேன் ஒன்றுபோற்
றானுழைத் துழலு கின்றேன்
தண்டன் ஆயிரமிட் டுரைக்கும்விண் ணப்பமது
தான்என்னை யெனில் உன்னடியார்
சைவயோ கஞ்செய்வர் யானுமொரு கால்போன
சைவ யோகஞ் செய்குவேன்
தட்டுறா ஞானம்உடை யார்நினது தொண்டர்யான்
தானும்அது சுட்ட உடையேன்
சாந்தநெஞ் சுடையர்நின தன்பர்யான் மணம்வீசு
சாந்தநெஞ் சதுவும் உடையேன்
சகசநிய மம்பெறுவர் நின்அடியர் அடிமையும்
சகச நியமம் பெற்றுளேன்
தனிவீடு விழைவர்நின் அன்பர்யான் பலகூட
சாலையுள வீடு விழைவேன்
சார்புலக் கள்வர்வரின் அஞ்சுவர்நின் அடியர்யான்
தனிவரினும் மிக அஞ்சுவேன்
தாழ்பொறி அடக்குவர்நின் அன்பர்யான் உயர்பொறிகள்
தமைஅகம் அடக்க வல்லேன்
தமியனேன் தன்னைநீ கைவிடேல் விடினும்நின்
தன்னைநான் விடுவ னல்லேன்
தகுவழக் கிட்டெனினும் நின்பால் எனக்குமொரு
சார்புறச் செய்கு வேனே.
1
2 வெண்பா

பண்டு குலம்பேசப் பரிந்ததில்லை ஈண்டென்னைக்
கொண்டு குலம்பேசக் குறிப்பானோ - தொண்டுசெய
நீண்டவரா யப்பெருமா னீக்குந் திருத்துறைசைத்
தாண்டவரா யப்பெருமான் றான்.
2
3 கட்டளைக் கலித்துறை

வானேர் அமரர் வருந்திக் கடைந்த மருந்துவந்து
தானே ஒருசிறு நாய்க்குக் கிடைத்த தகவெனஎம்
மானேர் துறைசைநற் றாண்டவ ராய மணிஎனது
பானேர் கிடைத்தும் பயன்கொள்கி லேன்வெறும் பாவியனே.
3
4 மின்னேர் சடைமுடித் தாண்டவ ராய வியன்றவநின்
றன்னேர் அடைதற் கெளிதாக நான்பெற்றுந் தாழ்த்துகின்றேன்
பொன்னே கொடுத்தும் எனுநா லடியின்(437) பொருட்கிலக்காய்
என்னே இருந்துழல் என்ஏழை வன்மதி என்மதியே.
4
5 (437) இங்கு மேற்கொண்டுள்ள நாலடியார்ச் செய்யுள்:

பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல
நயமில் அறிவி னவர்.

- பெரியாரைப் பிழையாமை 2 (162)

வருந்துக் கனவினுஞ் சோறறி யானை மணத்தி ...
விருந்துக் கழைப்பது போலேநின் பொற்பத ...
மருந்துக்கு மெய்சொல வாராத வென்றனை ...
தருந்துக்க ஊழ்விட மாட்டாது தாண்டவ ...
5
6 வாய்மட் டுமோமன மட்டோ என் ஆருயிர்ம ...
போய்மட் டுறுமின் சுவைமய மாக்குநின் பொன்மலர் ...
ஆய்மட் டமுதஞ் செவிக்கேற முன்முய லாமையிந ...
நாய்மட் டுமோதந்தை தாய்மட்டு மாஞ்சைவ நி ...(438)
6
(438). தாண்டவராய சுவாமிகளுக்கு எழுதிய ஆறுபாடல்களில் முதல் இரண்டு பாடல்களும் ஒரு திருமுகம்.
பின் நான்கு பாடல்களும் வேறோர் சமயம் எழுதியவை.
5, 6-ஆம் பாடல்களில் புள்ளியிட்ட இடங்களில் ஏடுகள் சிதைந்துள்ளதாக ஆ. பா. குறிக்கிறார்.


6. அன்பர்களுக்கு எழுதி விடுத்த திருமுகப் பாடல்கள்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1 படிப்பதுநன் றெனத்தெரிந்த பாங்குடையாய்
மன்றுள்வெளிப் பரம னன்பே
தடிப்பதுநன் றெனத்தேர்ந்த சதுருடையாய்
அறநவின்ற தவத்தாய் வீணில்
துடிப்பதிலாத் தூயமனச் சுந்தரப்பேர்
உடையாய்என் தோழ கேள்நீ
அடிப்பதுமச் சிறுவர்களை அடிப்பதுநன்
றலஎன்மேல் ஆணை ஆணை(439)
(439). படிக்கும் பிள்ளைகளை அடிக்க வேண்டா எனப் பொன்னேரி சுந்தரம் பிள்ளைக்கு எழுதி அனுப்பியது.
2 திருவோங்கு பொற்சபையும் சிற்சபையும்
நம்பெருமான் செய்யா நின்ற
உருவோங்கும் ஆனந்தத் தாண்டவமும்
கண்டினிதாங் குறைக யானும்
தருவோங்கு தில்லைநகர்க் கோரிருபால்
நாள்வரைக்குட் சார்கின் றேன்நம்
இருவோங்கள் குறையும்இறைக் குரைத்தகற்றிக்
கொளலாம்நீ இளையேல் ஐயா.440
(440). பொன்னேரி சுந்தரம் பிள்ளை வறுமைதீர வழிகேட்டபோது பாடி அளித்தது.
3 பண்ப னேகமும் திரண்டுரு
வாகிஎம் பாக்கியம் போல்வந்த
நண்ப னேநினைப் பிரிந்தநாள்
முதல்இந்த நாள்வரை உணவெல்லாம்
புண்ப னேர்ந்தபோ துண்டவாம்
கண்டுநிற் புல்லிநின் னுடனிங்கே
உண்ப னேல்அஃ துணவென
மதிப்பன்ஈ துண்மைஎன் றுணர்வாயே.(441)
(441) இதுவும் அடுத்த பாட்டும் இன்னார்க்கு எழுதியது என்பது விளங்கவில்லை.
4 திருவளருந் திறத்தாய் என்கண் ணனையாய்
நீஅனுப்பச் சிறியேன் தன்பால்
வருகடிதந் தனைஎ திர்கொண் டிருகைவிரித்
தன்பினொடு வாங்கி நின்றேன்
உருவளரு மணிமுடியாய்ச் சூட்டினேன்
கண்களிலே ஒற்றிக் கொண்டேன்
பொருவருமோர் முத்தமிட்டேன் பூசித்தேன்
வாசித்தேன் புளகுற் றேனே.
5 திருமயிலா புரியீசன் திருவருளால்
வேலெனும்பேர் சிறக்க வாழ்வோய்
ஒருமையிலா மற்றவர்போல் எமைநினைத்தல்
வேண்டாம்எம் உள்ளம் நின்றன்
கருமையிலாக் கருணைமுகம் காண்பதற்கு
விழைந்தங்கே கலந்த திங்கே
அருமையிலாப் பெருமையிலே இருக்கின்றேம்
இதுகடவுள் ஆணை என்றே.(442)
(442). இராயல் ஹோட்டல் புதுவை வேலு முதலியார்க்கு எழுதியது. மதுரைத் தமிழ்ச்சங்கம்
மு. ரா. கந்தசாமிக் கவிராயர் தொகுத்த தனிச்செய்யுட்சிந்தாமணியில் (1908) உள்ளது.
கொட்டாம்பட்டி, கருப்பையா பாவலர் தொகுத்து,< ர. ௒உீ௃ா஦஺௰ொ & ஸ௵஦ீ௉஢ ஦௅ே஢ூ஢௰஼
தனிச்செய்யுட் சிந்தாமணியில் (1901) இது சில பாட பேதங்களுடன் பின்வருமாறு காணப்படுகிறது.

திருமயிலா புரியீசன் திருவருளால்
வேலெனும்பேர் சிறக்க வாழ்வோய்
ஒருமையிலா மற்றவர்போல் எனைநினைத்தல்
வேண்டாம்என் உள்ளம் நின்றன்
கருமையிலாக் கருணைமுகம் காண்பதற்கு
விழைந்ததிங்கே கலந்த தங்கே
அருமையிலாப் பெருமையிலே இருக்கின்றேன்
இதுகடவுள் ஆணை என்றே.

ஆ. பா. இதனை இவ்வாறே திருமுகப் பகுதியில் சேர்த்துள்ளார். பாவலர் பாடத்தினும் கவிராயர் பாடமே
பொருட்பொருத்த முடையது, சிறந்தது.

நிலைமண்டில ஆசிரியப்பா
6 இறையருள் நிரம்ப இருத்தலான் மகிழ்ந்து
பிறையென வளருநம் பிள்ளை மணிக்கு
ஊருவிற் கட்டி உடனே உடையும்
அதுகுறித் தையநீ அஞ்சலை அஞ்சலை
இதுகுறித் தருள்நீ றிதற்குள் அடக்கஞ்
செய்துவைத் தனன்அத் திருநீ றெடுத்து
எய்துமுப் போதும் இடுகமற் றதன்மேல்
கொவ்வைச் சாறும் கோள்வெடி யுப்பும்
கவ்வக் கலந்து காய்ச்சிப் பூசுக
பூசுக உடைந்தபிற் பூரம் பூசுக
பாசுறு முருங்கைப் பட்டைச் சாற்றினில்.(443)

(443) கூடலூர் பேரை தேவநாத பிள்ளைக்கு எழுதியது. பிறை என வளரும் நம் பிள்ளை மணி எனக்
குறிப்பிடப் பெறுபவர் தேவநாத பிள்ளையின் மகன் அய்யாசாமிப் பிள்ளை.
7 கல்வியிற் கேள்வியிற் கடவினுஞ் சிறந்து
அன்பறி வொழுக்கம் அமைந்தென் னிரண்டு
கண்போன் றென்பாற் கனிவுகொண் டமர்ந்த
குணரத் தினநீ குடும்பத் துடனே
தீர்க்க ஆயுளும் செல்வப் பெருக்கும்
நோயற்ற வாழ்வும் நுவலரும் கீர்த்தியும்
சிவந்திகழ் ஞானமும் சித்தியும் பெற்று
வாழ்க வாழ்க மகிழ்ந்தருட் டுணையால்
வாழ்க வாழ்க வளம்பெற வாழ்க.(444)
(444). இறுக்கம் இரத்தின முதலியார்க்கு எழுதிய 20 ஆவது திருமுகத்தின் தலைப்பில் காணப்படுவது. (19-5-1864)

7. சாற்றுக் கவிகள்

7.1. நிட்டானுபூதி உரைக்கு அருளிய சாற்றுக்கவி (445)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நலங்கொள்சிவ யோகமணம் நாற்றிசையு மணக்கும்

ஞானமணம் கந்திக்கும் மோனமணம் நாறும்
விலங்கலில்சித் தாந்தமணம் பரிமளிக்கும் இன்பா
வேதாந்த மணங்கமழும் வேதமணம் வீசும்
தலங்கொளுமெய் அத்துவிதத் திருமணமும் பரவும்
தனிமுத்துக் கிருட்டினப்பேர் தங்கியநம் பிரமம்
வலங்கொளுநன் னிட்டானு பூதியெனு நூற்கே
வாய்மலர்ந்த உரையெனுமோர் மாமலரி னிடத்தே.

(445). நிட்டானுபூதி சிறந்த அனுபூதிநூல். அருளியவர் திருக்கோவலூர் ஆதீனம் ஞானியார் மடாலயம்
முதல் குருமூர்த்திகளாகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசா சுவாமிகள். உரைசெய்தவர்
முத்துக்கிருஷ்ண பிரம்மம். இவ்வுரை மிகச் சிறந்த உரை. 91 நூல்களிலிருந்து 410 செய்யுள்களை
மேற்கோளாக உரையாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். இவ்வுரை அடிகளின் சாற்றுக் கவியுடன் 1851இல்
(விரோதி- கிருது, மார்கழி) அச்சாயிற்று.


7.2. சிதம்பர புராணப் பதிப்புக்கு(446) அருளிய சாற்றுக்கவிகள்

காப்பு

குறள்வெண் செந்துறை

(446) புராணத் திருமலைநாதர் இயற்றிய சிதம்பர புராணத்தை மதுரை ஆதீனம் சிதம்பர சுவாமிகள்
1855இல் (இராட்சத, ஆவணி) அச்சிற் பதிப்பித்தார். இவை அப்பதிப்புக்கு அடிகள் அருளிய சாற்றுக்
கவிகளாம். இச் சிதம்பர சுவாமிகள் அடிகளுடன் பழக்கமிக்குடையவர். 1867இல் திருவருட்பா முதன்
முதலில் அச்சிடப்பெற்றபோது 'தண்ணீர் விளக்கெரித்த' என்னும் வெண்பாவை நூற்சிறப்பாகப் பாடியவர்.

சிதம்பர புராணம் இதம்பெறத் திருத்திய சிதம்பர முனிவன் பதம்பர வியது.

நிலைமண்டில ஆசிரியப்பா
செம்மலர்ச் செம்மலுந் திருத்தகு நிறத்தனும்
அம்மலர்க் கரத்திற் கம்மலர்க் கடவுளும்
படைத்திடல் முன்னாப் பயனுறு பெருந்தொழில்
நடைத்திற மூன்று நடாஅய்ப் பிறங்கிய
தத்தந் தலைமையிற் றாழ்வின்றி ஓங்குபு
சித்தந் திறமுறத் திருவருட் சார்த்திச்
சின்மய வடிவில் சிதாகா யத்திடைத்
தன்மய இன்பத் தனிநடம் புரியும்
காரண எண்குணா கார அகண்ட
பூரண பராபர புனித சிற்பர
10
சிவநிலை இஃதெனத் தெளிவித் தழியா
நவநிலை ஞாங்கர் நண்ணிய அனுபவத்
தனிச்சிவ ஞானந் தன்னைமூ வாண்டிற்
பனிப்பறச் சிவைமுலைப் பாலொடு மளாஅய்
ஊட்டிட உண்டிவ் உலகெலாந் தழைப்ப
வாட்டமில் அமுத வாய்மலர் மலர்ந்து
தோடுடை எனமறைச் சொல்ல முதளித்து
நாடுடைத் தாதையை நயப்பித் தருளிப்
பற்பல சைவப் பதிதொறும் அணுகிச்
சொற்பல பதிகச் சுருதிகள் புனைந்து
20
பொற்றிருத் தாளமும் புதுமணிச் சிவிகையும்
கொற்றவர் புகழ்மணிக் குடையும் சின்னமும்
சுந்தரக் காளமும் சந்தநற் றாரையும்
சிந்தரும் வெண்மணிப் பந்தரும் காசும்
பரம்பரன் அளிக்கப் பண்புடன் பெற்றோன்
வரம்பெறு மழவன் மகட்பிணி சவட்டி
மருகலில் வசியன் வல்விடந் தீர்த்து
வருநெறி பற்பல மகத்துவம் புரியாக்
கூடலில் தென்னன் கூனும் குற்றமும்
வாடலில் அமணர்தம் மதமும் வாழ்க்கையும்
30
எளிதினின் முருக்கி இயல்புறும் ஆண்பனை
அளியுறு பெண்பனை யாகக் காட்டிஒண்
மயிலையில் என்பினை மங்கை யாக்கியுள்
அயர்வறு திருமணத் தடைந்தவர் தமக்கெலாம்
பெறலருஞ் சோதிப் பேருரு வளித்திவ்
வையமும் வானமும் மறையும் சைவமும்
உய்ய ஓங்கிய ஒருபெருங் குரவன்
ஞான சம்பந்த நாயகன் அருளால்
ஈன சம்பந்த மெல்லாம் ஒழித்தோன்
நரைவரும் என்றெணி நல்லறி வாளர்
40
இரைவுறு குழவி யிடத்தே துறந்தார்
என்னு நாலடிக்447 கிலக்கிய மானவன்
மன்னுமா தவரெலாம் வழுத்தும் அருந்தவன்
எல்லா உயிர்க்கும் இதஞ்செய லன்றிப்
பொல்லாமை ஒன்றும் புணராப் புண்ணியன்
வாய்மையும் மாண்பும் வயம்பெறு மனனும்
தூய்மையும் தெளிவும் சுற்றமாக் கொண்டோ ன்
கனவினும் உலகைக் கருதாக் கருத்தினன்
நனவினிற் சுழுத்தி நண்ணிய திறத்தோன்
முப்பொருட் டிறனும் முழுதுணர் முனிவன்
50
எப்பொருட் கண்ணும் மெய்ப்பொருள் உணர்ந்தோன்
சிவமலா தொன்றும் சிந்தைவைத் தறியான்
பவமிலா நெறியே பற்றிய நிலையினன்
காமம் வெகுளி மயக்கெனும் கரிசினை
நாமங் கெடஉள் நலிவித்த வித்தகன்
துறவரில் துறவன் சுத்தமெய்ஞ் ஞானி
அறவரின் அறவன் அன்பரின் அன்பன்
திகழ்சிவ யோகி ஜீவன் முக்தன்
புகழிகழ் ஒன்றும் பொருந்தாப் புனிதன்
சிவநூல் முழுதும் தெளிந்த சத்துவன்
60
பவநூல் மறந்தும் பாராத் திறலோன்
என்போன் றவர்க்கும் இன்னருள் புரிவோன்
தன்போன் றவரிலாச் சாந்த வேந்தன்
சைவம் பழுத்த தனித்தரு நங்குல
தெய்வமாம் மதுரைச் சிதம்பர தேவன்
புண்ணிய சிதம்பர புராணந் தன்னை
நுண்ணிய அறிவால் நோக்குபு திருத்தம்
ஏர்பெற இயற்றி யாவரும் பயின்றுயப்
பாருறும் அச்சிற் பதிப்பித் தருளிய
உதவியை நினைந்துளம் உவந்து முப்பொழுதும்
70
பதமருள் அவனருட் பதமிறைஞ் சுதுமே.

(447). இங்கு மேற்கொண்டுள்ள நாலடியார்ச் செய்யுள்:

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.
- இளமை நிலையாமை 1 (11)

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உலகெலாம் புகழும் சிதம்பர வரலா
றுயிரெலாம் உணர்ந்துவீ டடைவான்
அலகுறா மடற்கண் எழுதுறா எழுத்தின்
அமைவித்த அருட்பெருங் கடலே
இலகுசீர்க் கூடன் மடாலயத் தமர்ந்த
எழிற்றிரு ஞானசம் பந்தத்
திலகசற் குருவின் அருள்பெறும் பொருளே
சிதம்பர மாதபோ நிதியே.
1
சிதம்பர வரலா றுலகெலா முணரத்
திருத்திஎம் போன்றவர் தமக்கும்
இதம்பெறும் அழியாப் பதம்பெற அளித்த
இன்பமே என்தனி அன்பே
கதம்பெறு மதங்கள் அதம்பெறப் புரிந்த
கவுணியற் கினியஉட் களிப்பே
சிதம்பெறு ஞானா முதம்தரு மதுரைச்
சிதம்பர மாதபோ நிதியே.
2
சத்திறை உயிர்தான் சத்தசத் தாகும்
தடைமல மசத்திவற் றிடைநீ
இத்திறை அபர நோக்கலை பரநோக்
கெய்துதி இறைநிறை வுறைவாய்
புத்திஈ தெனஎன் புத்தியைத் திருத்தும்
போதசின் மயஒளி மணியே
சித்திஎண் வகையும் பெறத்தரு மதுரைச்
சிதம்பர மாதபோ நிதியே.
3
மறைநெறிப் பொதுவும் ஆகமச் சிறப்பும்
வகுப்பது சிவத்தொடு மருவிக்
குறைநிறை வகலக் கூடுதல் இதனைக்
குறிப்பறக் குறியெனக் குறிக்கக்
கறைமிடற் றொளித்துச் சடைமுடி யோடும்
காட்சிதந் தருள்செழுங் கதிரே
சிறைமலம் அகற்றி அருள்தரு மதுரைச்
சிதம்பர மாதபோ நிதியே.
4
ஒன்றெனில் இரண்டாங் குறுமயல் அதனால்
ஒன்றெனக் குறித்தலும் ஒழித்தே
நின்றனை யெனில்நீ நின்றனை அறிதி
நெறியிதென் றுணர்த்திய நிறைவே
மன்றிலா னந்த வாரிவா யமுதம்
வாரியுண் டெழுஞ்செழு முகிலே
தென்றிசைக் கணிகொண் டோ ங்கிய மதுரைச்
சிதம்பர மாதபோ நிதியே.
5
திருச்சிற்றம்பலம்



7.3. வேதநாயகம் பிள்ளை நீதிநூலுக்கு அருளிய சாற்றுக்கவி (448)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வளங்கொள்குளத் தூர்அமர்ந்த வேதநா

யகன்அருளால் வயங்க முன்னாள்
உளங்கொள்மனு உரைத்தனன்ஓர் நீதிநூல்
அந்நூற்பின் உறுநூ லாக
துளங்கிடும்அவ் வூர்உறைஅத் தோன்றல்ஓர்
நீதிநூல் சொன்னான் இந்நாள்
விளங்கும் இந்நூல் முன்னர்மற்றை
நூல்எல்லாம் கிழிபடத்தின் வெண்ணூல்அன்றே.

(448). மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை (11-10-1826 - 21-7-1889) கிறித்தவர். ஆயினும் சமய சமரச நோக்கம்
உடையவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களின் நண்பர். சைவ ஆதீனங்களுடன் பழக்க
முடையவர். இவரது நீதிநூல் 1859 இல் (காளயுக்தி, தை) அச்சாயிற்று. இரண்டாம் பதிப்பு - 1860. அடிகளின்
சாற்றுக்கவி, 'சென்னபட்டணம் வித்வான் ஸ்ரீ இராமலிங்க பிள்ளையவர்களியற்றியது' என அச்சிடப் பெற்றுள்ளது.


7.4. தேவநாத பிள்ளை தோத்திரங்களுக்கு அருளிய சாற்றுக்கவி (449)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இரும்புருக்க உலைக்களந்தோ றுழல்கின்றீர்

இரும்பொன்றோ இளகாக் கல்லும்
விரும்பிஒரு கணத்துருக்கும் உளவொன்று
கேட்கவள மேவு கூடற்(450)
பெரும்புகழான் தேவநா தன்பரனைக்
குறித்தன்பு பிறங்கப் பாடும்
கரும்பியைந்த சுவைப்பாட்டில் ஒன்றவைக்கு
முன்பாடிக் காணு வீரே.

(449). 'இறையருள் நிரம்ப இருத்தலான்' என்னும் திருமுகப் பாடல் இத் தேவநாத பிள்ளைக்கு எழுதப் பெற்றதே.
அடிக்குறிப்பு 443 காண்க.
(450). கூடல் - கூடலூர்.


7.5. முத்துசாமி முதலியார் தோத்திரங்களுக்கு அருளிய சாற்றுக்கவி (451)

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஒருவகைப் பொருள்தெரித் துயவுதீர் மறைகள்நான் கொன்றி வாழ்க

உயரரன் தரும்ஏழு நான்கதாம் ஆகமம் உலகின் மல்க
இருவகைப் பவம்ஒழித் திலகும்வெண் ணீற்றினம் எங்கும் ஓங்க
இணையில்நல் அறமுன்ஆம் பயன்ஒரு நான்கும்ஈ டேறி வெல்க
பொருவலற் றரையர்எத் திசையுளும் நீதியால் பொலிக யாரும்
புகழ்சிவாத் துவிதசித் தாந்தமெய்ச் சரணர்எண் புல்க நாளும்
திருவருட் பனுவல்சொற் றிடும்அவர்க் கெண்திரு சேர்க வாதைச்
செப்பு முத்துச்சுவா மிக்கவிக் குரிசில்சீர் செழிக மாதோ.

(451). குடும்பகோரம் எழுதப்பட்டது இம்முத்துசாமி முதலியார்க்கே.


7.6 உபதேச வெண்பா (452)

நேரிசை வெண்பா
நின்னிலையை என்னருளால் நீயுணர்ந்து நின்றடங்கின்
என்னிலையை அந்நிலையே எய்துதிகாண் - முன்னிலையை
இற்குருவி னாட்டாதே என்றுரைத்தான் ஏரகம்வாழ்
சற்குருஎன் சாமிநா தன்.

(452) இது திருச்சிற்றம்பல ஞானியார் என்பவர்க்குப் பாடி அளித்தது. அடிகளிடம் ஞானியார் உபதேசம் வேண்டினர்.
கல்லாடைத் துறவியாகிய அவர்க்கு வெள்ளாடை உடுத்த தாம் உபதேசம் செய்தல் மரபன்று என அடிகள் பகன்ற
பின்னரும் ஞானியார் மீண்டும் வற்புறுத்தி வேண்டவே அடிகள் இவ்வெண்பாவைப் பாடித்தந்தருளினர்.

திருச்சிற்றம்பலம்

பல்வகைய தனிப்பாடல்கள் முற்றும்