அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும் அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத் துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன் என்உயிருக் குயிராகி இலங்கியசற் குருவே