அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன் அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும் உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும் ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே