பாடல் எண் :3904
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்
பாடல் எண் :5810
அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.