அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே