பாடல் எண் :3909
இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர் எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்
செச்சைமலர் - வெட்சிமலர் முதற்பதிப்பு
பாடல் எண் :4214
இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே
பாடல் எண் :5364
இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்
இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி
அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து
மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த
படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே
பாடல் எண் :5717
இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.