இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித் தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத் தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும் முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே