இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என் றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால் மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே