உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும் தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி எண்ணியஎன் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி இலங்குகின்ற பேர்அருளாம் இன்னமுதத் திரளே புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே