உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர் என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன் தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே