உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒருதனித் தந்தையே நின்பால் குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில்அக் குற்றம் இற்றென அறிவித் தறிவுதந் தென்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும் மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை வழக்கிது நீஅறி யாயோ