உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட ஒருவனே உலகெலாம் அறியத் தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம் சித்தம்அஞ் சேல்என்ற சிவமே கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே கடவுளே கனகஅம் பலத்தென் வள்ளலே என்றேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே