ஊட்டு கின்றனை உண்ணுகின் றனன்மேல் உறக்கு கின்றனை உறங்குகின் றனன்பின் காட்டு கின்றனை காணுகின் றனன்நீ களிப்பிக் கின்றனை களிப்புறு கின்றேன் ஆட்டு கின்றனை ஆடுகின் றனன்இவ் அகில கோடியும் அவ்வகை யானால் தீட்டும் அன்பருக் கன்பநின் தனது சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே