எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே