எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே கண்ணார் துதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ் வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே
எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித் தண்ணார் அமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே கண்ணார் ஒளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என் அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே