எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள் எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி நன்குமதி யாதிருந்த நாயி னேனைத் தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத் தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள் புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில் பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ