எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத் தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித் தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய் உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே