என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே