என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை என்னுடைப் பொருளினை எளியேன் மன்னுடைக் குருவின் வடிவினை என்கண் மணியினை அணியினை வரத்தை மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த மிளிர்அருள் தருவினை அடியேன் தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத் தணிகையில் கண்டிறைஞ் சுவனே
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும் பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின் தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான் நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே