என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே என்அறி வேஎன தறிவினுக் கறிவே அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே அற்புத மேபத மேஎன தன்பே பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப் பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே தனிநட ராசஎன் சற்குரு மணியே