ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே