கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே