கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும் பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால் புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால் ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே
கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார் விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே