கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன் தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத் தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான் பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப் பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான் உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன் உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ