கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் காணக் கிடையாக் கழலுடையார் நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ அண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும் உண்ணும் உணவோ டுறக்கமுநீத் துற்றாள் என்றிவ் வொருமொழியே
கண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள்அருள் வண்ணம் உடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன் நண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி எண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே