கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன் என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே