கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக் கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத் துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன் தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத் தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே