கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல் வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான் தனதுதிரு உளம்எதுவோ சற்றுமறிந் திலனே