பாடல் எண் :391
கற்றவர் புகழ்நின் திருவடி மலரைக்
கடையனேன் முடிமிசை அமர்த்தி
உற்றஇவ் வுலக மயக்கற மெய்மை
உணர்த்தும்நாள் எந்தநாள் அறியேன்
நற்றவர் உணரும் பரசிவத் தெழுந்த
நல்அருட் சோதியே நவைதீர்
கொற்றவேல் உகந்த குமரனே தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே
பாடல் எண் :3425
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும்
கண்ணுதற் கடவுளே என்னைப்
பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர்
பெருகிய பழக்கமிக் குடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து
மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி
உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்
பாடல் எண் :3531
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என்
காதிலே கிடைத்தபோ தெல்லாம்
மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம்
மரபினர் உறவினர் தமக்குள்
உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி
ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த
ஏக்கமுந் திருவுளம் அறியும்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.