கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக் கரிசுபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன் புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித் தனிப்பொருள்என் கையிலளித்த தயவுடைய பெருமான் கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில் கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே