கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும் கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில் சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப் பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம் படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே